Monday, February 2, 2026

விருதுநகரில் கலப்பட டீ தூள் தயாரித்த நிறுவனத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேநீர் கடைகளில் தரமற்ற மற்றும் கலப்படமான டீ தூள் பயன்படுத்தப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன. இதனைத் தொடர்ந்து, தேநீர் கடைகளில் பயன்படுத்தப்படும் டீத் தூள்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தினர். அந்த ஆய்வில், பெரும்பாலான கடைகளில் பயன்படுத்தப்பட்ட டீ தூள்கள் கலப்படம் செய்யப்பட்டவை என்பது தெரியவந்தது.

இதன் அடிப்படையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், சந்திரகிரிபுரம் கிராமத்தில் பாண்டியன் என்பவர் நடத்தி வந்த டீ தூள் பேக்கிங் நிறுவனத்தில் கலப்பட டீ தூள் தயாரிக்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டது. அந்த கலப்பட டீ தூள், விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வந்ததும் தெரியவந்தது.

மேலும், ஊட்டி பகுதிகளில் இருந்து முட்டை தொழில்கள் மூட்டைகளாக வாங்கி வந்து, அவற்றை போலியான டீ தூள் நிறுவனப் பெயரில் லேபிள் ஒட்டி, கலப்பட டீ தூளாக பேக்கிங் செய்து விற்பனை செய்ததும் சோதனையில் வெளிச்சத்துக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து, அந்த பேக்கிங் நிறுவனத்தில் இருந்து சுமார் 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 13 டன் அளவிலான கலப்பட டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அந்த நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இது தொடர்பாக, உணவு பாதுகாப்புத் துறை அளித்த புகாரின் பேரில், ஆமத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News