பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ள இந்த காலத்தில், பைக் ஓட்டுபவர்களுக்கும் கார் ஓட்டுபவர்களுக்கும் மைலேஜ் ஒரு பெரிய கவலையாக மாறியுள்ளது. தினசரி அலுவலகப் பயணம் இருந்தாலும், நீண்ட தூர பயணம் இருந்தாலும், எரிபொருள் செலவு அதிகமாகிறது. ஆனால் மைலேஜ் அதிகரிக்க பெரிய மாற்றங்கள் தேவையில்லை. சில எளிய பழக்க மாற்றங்கள் போதுமானவை.
சரியான டயர் பிரஷர்
முதலில் டயர் பிரஷரை சரியாக வைத்திருக்க வேண்டும். டயர் அழுத்தம் குறைவாக இருந்தால் வண்டி சீராக உருளாது. இதனால் என்ஜினுக்கு அதிக சுமை ஏற்பட்டு எரிபொருள் அதிகமாக செலவாகும். எனவே இரண்டு வாரத்திற்கு ஒருமுறை டயர் பிரஷரை சரிபார்த்து, வாகன தயாரிப்பாளர் பரிந்துரைக்கும் PSI அளவையே பின்பற்ற வேண்டும்.
ஹாஃப் கிளட்ச்
டிராபிக்கில் பலர் செய்யும் பெரிய தவறு ஹாஃப் கிளட்ச் பயன்படுத்துவது. பைக்கில் கிளட்சை பாதியாக பிடித்துக்கொண்டு ஓட்டினால் என்ஜின் பவர் வீலுக்கு முழுமையாக செல்லாது, இதனால் பெட்ரோல் வீணாகும். காரிலும் அடிக்கடி திடீர் ஆக்சிலரேஷன் மற்றும் திடீர் பிரேக் போடுவது மைலேஜை குறைக்கும். மென்மையான ஆக்சிலரேஷன், நிலையான வேகம், மெதுவான பிரேக்கிங் ஆகியவை எரிபொருள் சேமிப்புக்கு உதவும். தேவையில்லாமல் கிளட்ச் பயன்படுத்தாமல், சரியான கியரை தேர்வு செய்வது முக்கியம்.
வாகன பராமரிப்பு
வாகன பராமரிப்பும் மைலேஜில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏர் ஃபில்டர் அழுக்காக இருந்தால் என்ஜினுக்கு தேவையான சுத்தமான காற்று கிடைக்காது. இதனால் செயல்திறன் குறைந்து எரிபொருள் பயன்பாடு அதிகரிக்கும். சர்வீஸ் செய்யும் போது ஏர் ஃபில்டரை சரிபார்த்து தேவையெனில் மாற்ற வேண்டும்.
அதேபோல் சரியான நேரத்தில் சர்வீஸ் செய்யாமல் தாமதிப்பது, என்ஜின் ஆயில் மாற்றத்தை தவிர்ப்பது, பைக்கில் செயின் லூப்ரிகேஷன் செய்யாதது, காரில் வீல் அலைன்மென்ட் தவறாக இருப்பது போன்றவை மைலேஜை குறைக்கும். வண்டி ஓடுகிறது என்பதற்காக சர்வீஸை தவிர்க்கக்கூடாது.
என்ஜின் ஆயில்
என்ஜின் ஆயில் தேர்விலும் கவனம் தேவை. எந்த எண்ணெய் போட்டாலும் சரி என்று நினைப்பது தவறு. தயாரிப்பாளர் பரிந்துரைக்கும் தரமான என்ஜின் ஆயிலை பயன்படுத்த வேண்டும். அதிக அடர்த்தியான (thick) ஆயில் பயன்படுத்தினால் என்ஜினுக்கு அதிக சுமை ஏற்பட்டு மைலேஜ் குறைய வாய்ப்பு உள்ளது. சரியான ஆயில் இருந்தால் என்ஜின் மென்மையாக இயங்கும்.
மிதமான வேகம்
மெதுவாக ஓட்டினால் குறைந்த கியரில் RPM அதிகரித்து எரிபொருள் செலவு அதிகமாகும். அதேபோல் அதிக வேகத்தில் ஓட்டினால் காற்று எதிர்ப்பு அதிகரித்து மைலேஜ் குறையும். எனவே நிலையான, மிதமான வேகத்தில் ஓட்டுவது சிறந்தது.
கூடுதல் பொருட்கள்
பைக்கில் தேவையில்லாத கனமான கேரியர்கள், கூடுதல் பொருட்கள் வைத்திருப்பது மைலேஜை குறைக்கும். காரில் டிக்கியில் பயன்படுத்தாத பொருட்களை நிரப்பி வைத்திருந்தாலும் வாகன எடை அதிகரித்து எரிபொருள் செலவு கூடும்.
இந்த எளிய மாற்றங்களை தொடர்ந்து பின்பற்றினால், உங்கள் பைக் மற்றும் காரின் மைலேஜ் நிச்சயம் மேம்படும்.
