Tuesday, January 27, 2026

ஐரோப்பிய யூனியன் உடனான வர்த்தக ஒப்பந்தம் – இந்தியாவில் விலை குறையும் பொருட்கள் எவை?

இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்று (ஜனவரி 27) கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் அன்டோனியோ கோஸ்டாவும் கையெழுத்திட்டனர். இதனை “அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களுக்கும் தாய்” என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் வர்ணித்துள்ளார். இந்திய தலைவர்களும் இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுக்கு பல்வேறு பொருளாதார நன்மைகள் கிடைக்க உள்ளன. குறிப்பாக, பல பொருட்களின் விலை குறைய வாய்ப்பு இருப்பதால் நுகர்வோர்கள் பெரிதும் பயனடைவார்கள்.

ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்படும் மெர்சிடிஸ், ஆடி, பிஎம்டபிள்யூ போன்ற ஆடம்பர கார்களுக்கு இந்தியாவில் தற்போது 100 சதவீதத்துக்கும் அதிகமான இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. புதிய ஒப்பந்தத்தின் படி, 15,000 யூரோக்களுக்கு (சுமார் ரூ.16 லட்சம்) அதிக விலை கொண்ட கார்களுக்கு விதிக்கப்படும் வரி 40 சதவீதமாக குறைக்கப்படும். மேலும் கூடுதலாக 10 சதவீதம் வரை வரி குறையும் வாய்ப்பும் உள்ளது. இதனால் இந்த வகை கார்களின் விலை இந்திய சந்தையில் கணிசமாக குறையும்.

இந்தியாவில் ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையிலான சிறிய மற்றும் நடுத்தர ரக கார்களே அதிகமாக விற்பனையாகின்றன. இவற்றை பெரும்பாலும் இந்திய உள்நாட்டு நிறுவனங்களே உற்பத்தி செய்து வருகின்றன. இந்த சந்தைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், குறைந்த விலை கொண்ட கார்களை ஐரோப்பிய யூனியன் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யாது என்றும், அதேபோல் இந்திய நிறுவனங்களும் குறைந்த விலை கார்களை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது என்றும் ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஒயின்களின் விலையும் குறைய உள்ளது. தற்போது இந்த ஒயின்களுக்கு இந்தியா 150 சதவீதம் வரை வரி விதித்து வருகிறது. புதிய ஒப்பந்தத்தின் படி, இந்த வரி 20 சதவீதமாக குறைக்கப்படும். இதனால் ஐரோப்பிய ஒயின்கள் இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும். ஆனால் 2.5 யூரோக்களுக்கு குறைவான விலை கொண்ட ஒயின்களுக்கு வரிச்சலுகை வழங்கப்படாது. இது உள்நாட்டு உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவாகும்.

மேலும், ஐரோப்பாவில் தயாரிக்கப்படும் நவீன மருத்துவ கருவிகள் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலையும் இந்தியாவில் குறையும். அதே நேரத்தில், இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு இந்திய மருந்து உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கும்.

ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விமான உதிரி பாகங்கள், மொபைல் போன்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப மின்னணு பொருட்களுக்கான விலையும் குறையும். இதன் காரணமாக இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்னணு பொருட்களின் உற்பத்தி செலவு குறைந்து, நுகர்வோர்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும்.

இரும்பு, எஃகு மற்றும் ரசாயனப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை முழுமையாக நீக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இப்பொருட்கள் அதிக அளவில் இந்தியாவுக்கு வரும். இதன் மூலம் கட்டுமானம் மற்றும் தொழில் துறைகளில் மூலப்பொருட்களின் விலை குறையும். வீடு வாங்குபவர்கள் உள்ளிட்ட பலரும் இதனால் நேரடியாக பயனடைவார்கள். அதே நேரத்தில், இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆடை, தோல் பொருட்கள் மற்றும் நகைகள் ஐரோப்பிய சந்தைகளில் அதிக அளவில் விற்பனை செய்யப்படும் வாய்ப்பும் உருவாகும்.

Related News

Latest News