Sunday, January 25, 2026

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு., குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8-ஆவது சம்பளக் கமிஷன் அடிப்படையில் சம்பள உயர்வு வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனிடையே, மத்திய அரசு சில குறிப்பிட்ட துறை சார்ந்த ஊழியர்களுக்காக தனிப்பட்ட ஊதிய உயர்வு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி, பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள், நபார்டு வங்கி ஊழியர்கள் மற்றும் ரிசர்வ் வங்கி ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத் தொகையை உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவின் மூலம் 46,322 ஊழியர்கள், 23,570 ஓய்வூதியதாரர்கள் மற்றும் 23,260 குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன் பெற உள்ளனர்.

இந்த அறிவிப்பின் முக்கிய அம்சமாக, பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் நபார்டு வங்கி ஊழியர்கள், ரிசர்வ் வங்கி ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மறுசீரமைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதித் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சமூக மற்றும் நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த சம்பள உயர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பொதுத்துறை காப்பீட்டு நிறுவன ஊழியர்களுக்கான சம்பள திருத்தம் 2022 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் வகையில் முன்தேதியிட்டு செயல்படுத்தப்படுகிறது. இந்த திருத்தத்தின் மூலம் அவர்களின் மொத்த சம்பளம் 12.41 சதவீதம் உயர்வடையும். இதில் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 14 சதவீத உயர்வு அடங்கும். இதன் மூலம் மொத்தம் 43,247 ஊழியர்கள் பயன் பெற உள்ளனர்.

மேலும், 2010 ஏப்ரல் 1க்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) தொடர்பான அரசின் பங்களிப்பு 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது அவர்களின் எதிர்கால நிதி பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

அதேபோல், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியம், அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்படும் தேதியிலிருந்து 30 சதவீத சீரான விகிதத்தில் திருத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பள உயர்வு பொருந்தும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில், தேசிய காப்பீட்டு நிறுவனம் லிமிடெட், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட், ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஆகியவை அடங்கும்.

நபார்டு வங்கியில் பணியாற்றும் அனைத்து குழு A, B மற்றும் C ஊழியர்களின் சம்பளம் மற்றும் படிகள் சுமார் 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த சம்பள திருத்தம் 2022 நவம்பர் 1ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வருகிறது.

அதேபோல், ரிசர்வ் வங்கி ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய திருத்தத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News