Sunday, January 25, 2026

‘எங்களுக்குள் சண்டை சச்சரவு இருந்தது உண்மைதான்’ – டிடிவி தினகரன் பேச்சு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரளாவில் இருந்து புறப்பட்டு, மதியம் 2.40 மணியளவில் பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மதுராந்தகம் வந்தடைந்தார்.

இந்த கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மேடையில் பேசியதாவது:-

தொடர்ந்து 3 முறை இந்தியாவின் பிரதமராக இந்திய மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்தியாவை உலக அரங்கில் ஒரு சிறந்த இடத்திற்கு உயர்த்திக் கொண்டிருக்கிற பிரதமர், தமிழ்நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அமமுக இந்த கூட்டணியில் வரவேண்டும் என்று விரும்பினார்.

இன்று நாங்கள் முழு மனதுடன் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியை தலைமையேற்றிருக்கிற எடப்பாடி பழனிசாமியை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறோம். நாங்கள் அம்மாவின் தொண்டர்கள் என்பதை எதிரிகள் மறந்துவிட்டார்கள்.

எங்களுக்குள் சண்டை சச்சரவு இருந்தது உண்மைதான். ஆனால் தமிழ்நாட்டின் நலனை கருதியும், அமமுக முன்னேற்றத்தை கருதியும் பிரதமர் அழைப்பை ஏற்று, நாங்கள் மனதில் இருந்த கோபத்தை விட்டுவிட்டு, எந்த வித அழுத்தமும் இன்றி இன்று நாங்கள் இந்த கூட்டணியில் இணைந்திருக்கிறோம்.

இந்த கூட்டணியின் வெற்றிக்காக அமமுகவின் ஒவ்வொரு தொண்டனும் தமிழ்நாடு முழுவதும் அயராது பாடுபடுவான் என்ற உறுதியை பிரதமருக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக இந்த கூட்டணியில் நாங்கள் இணைந்திருக்கிறோம் என்பதை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்று தமிழ்நாடே கொலை நாடாக, கொள்ளை நாடாக மாறி இருக்கிறது. அந்த குடும்ப ஆட்சியை நாம் முறியடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Related News

Latest News