வத்தலகுண்டு அருகே உள்ள நடகோட்டை கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் சோலார் நிறுவன வளாகத்திற்குள் சுமார் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த நிறுவனத்தில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, வளாகத்திற்குள் மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று நெளிந்து செல்வதை கண்டனர். இதைக் கண்டு அச்சமடைந்த தொழிலாளர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓடினர். உடனடியாக இந்த தகவல் வத்தலகுண்டு தீயணைப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், நீண்ட நேரம் முயற்சி செய்து லாவகமாக அந்த மலைப்பாம்பை உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட மலைப்பாம்பு சுமார் 7 அடி நீளமுடையதாக இருந்தது.
பின்னர் அந்த மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது. நடகோட்டை கிராமத்திற்கு அருகே மலைப்பகுதி இருப்பதால், அங்கிருந்து இந்த மலைப்பாம்பு வந்திருக்கலாம் என தீயணைப்பு மற்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
