சென்னையில் ஏற்கனவே சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை இரு வழிப்பாதைகளில் இயக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் மூன்றாவது வழித்தடமாக மெரீனா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி சுற்றுச்சாலை வரை 26 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
இதில், வடபழனி முதல் பூந்தமல்லி வரை 16 கிலோமீட்டர் தொலைவிலான மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன. அந்தப் பாதையில் மெட்ரோ ரயில் வழித்தட அமைப்புக்கான சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு, அதற்கான சான்றிதழும் பெறப்பட்டுள்ளது.
இதையடுத்து, வடபழனி – பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதற்கான பாதுகாப்பு சான்று பெற மத்திய ரயில்வே வாரியத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. தற்போது அந்த அனுமதியை ரயில்வே வாரியம் வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வரும் பிப்ரவரி மாதத்திற்குள் வடபழனி – பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆரம்பத்தில் ஓட்டுநருடன் ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகவும், அதன் பின்னர் ஓட்டுநர் இல்லா ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
