Wednesday, February 18, 2026

மதுரை மக்களுக்கு குட் நியூஸ்., ரூ.100 கோடியில் 976 புதிய சாலைகள்

மதுரை மாநகரப் பகுதியில் மழை வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்த சாலைகள் உள்ளிட்ட மொத்தம் 979 சாலைகள், ரூ.100 கோடி செலவில் மறுசீரமைக்கப்பட உள்ளன. மாநகராட்சி ஆணையர் சித்ராவின் துரித நடவடிக்கையால், கடந்த ஒரு ஆண்டாக மோசமான நிலையில் இருந்த சாலைகள் புதுப்பிக்கப்படவுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் ஒரே நேரத்தில் முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டம், விரிவாக்கம் செய்யப்பட்ட வார்டுகளில் புதிய பாதாள சாக்கடை திட்டம் போன்ற முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகள் நடைபெற்று வந்த காலகட்டத்திலேயே கோடை மழை, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சாலைகள் கடுமையாக சேதமடைந்தன.

இதனால், சாலைகளை பராமரிப்பதும், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்களை திட்டமிட்டபடி நிறைவேற்றுவதும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பெரும் சவாலாக இருந்தது. இதன் காரணமாக, பொதுமக்களும் பழுதடைந்த சாலைகளில் பயணம் செய்வதில் கடும் சிரமங்களை சந்தித்தனர்.

இந்நிலையில், நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய சாலைகள் அமைக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசின் பங்களிப்பாக ரூ.65 கோடியும், மாநகராட்சியின் பொதுநிதியில் இருந்து ரூ.35 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 100 வார்டுகளில் மிகவும் மோசமான நிலையில் உள்ள 979 சாலைகள் தேர்வு செய்யப்பட்டு, மொத்தம் 141 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிய சாலைகள் அமைக்கப்பட உள்ளன.

நீண்ட காலமாக மோசமான நிலையில் இருந்த சாலைகளுக்கு விடுதலை அளிக்க உள்ளதால், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related News

Latest News