Monday, January 19, 2026

ரயில் டிக்கெட் கேன்சல் செய்தால் மொத்த பணமும் குளோஸ்., வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் புது ரூல்ஸ்

இந்தியாவில் முக்கியமான போக்குவரத்து வசதிகளில் ஒன்றாக ரயில் சேவை விளங்குகிறது. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இந்தியன் ரயில்வேயை நவீனப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சமீபத்தில் இந்தியன் ரயில்வே, வந்தே பாரத் ஸ்லீப்பர் மற்றும் அம்ரித் பாரத் ரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனுடன், ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் டிக்கெட் ரத்து தொடர்பான விதிகளில் முக்கிய மாற்றம் கொண்டு வந்துள்ளது.

வந்தே பாரத் ஸ்லீப்பர் மற்றும் அம்ரித் பாரத் விரைவு ரயில்களுக்கான டிக்கெட் ரத்து விதிகளில் செய்யப்பட்ட இந்த மாற்றங்கள் ஜனவரி 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

முன்னதாக, ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு டிக்கெட்டை ரத்து செய்தால் கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என்ற நடைமுறை இருந்தது. ஆனால் தற்போது, வந்தே பாரத் ஸ்லீப்பர் மற்றும் அம்ரித் பாரத் ரயில்களில் இந்த காலக்கெடு 72 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ரயில் புறப்படுவதற்கு குறைந்தது 72 மணி நேரத்திற்கு முன்பு டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், டிக்கெட் கட்டணத்தில் அதிக தொகை பிடித்தம் செய்யப்படும். புதிய விதிகளின்படி, ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக டிக்கெட் ரத்து செய்தால், டிக்கெட் கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.

ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கும் 8 மணி நேரத்திற்கும் இடையில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்தால், 50 சதவீதம் கட்டணம் பிடித்தம் செய்யப்படும். ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பு டிக்கெட் ரத்து செய்தால், எந்த தொகையும் திரும்ப வழங்கப்படாது என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் டிக்கெட்டை ரத்து செய்ய தவறினாலும், டிடிஆர் (TTR) ரசீது சமர்ப்பிக்கப்படாவிட்டாலும், கட்டணம் திரும்ப வழங்கப்படாது. அதே சமயம், அம்ரித் பாரத் ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளுக்கு பழைய விதிமுறைகளே தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

இந்த புதிய டிக்கெட் ரத்து விதிமுறைகள் வந்தே பாரத் ஸ்லீப்பர் மற்றும் அம்ரித் பாரத் ரயில்களுக்கு மட்டுமே பொருந்தும் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், இந்த ரயில்களில் ஆர்ஏசி (RAC) டிக்கெட்டுகள் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News