பெண்களுக்கு ஜாக்பாட்., ரூ.5 லட்சம் மானியம் கொடுக்கும் தமிழக அரசு! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மகளிருக்கு விவசாய நிலம் வாங்குவதற்காக 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.

பெண்களின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை உறுதி செய்ய தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதில், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத்தொகை, மானியக் கடன் உதவி, சொந்த தொழில் தொடங்குவதற்கான கடன்கள், ‘தோழி’ விடுதிகள், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கான நிதியுதவி உள்ளிட்ட திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. அந்த வரிசையில், மகளிரை சொந்த நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்குடன் இந்த நில உடைமைத் திட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மகளிரின் நில உடைமையை அதிகரித்து, அவர்களின் சமூக–பொருளாதார நிலையை மேம்படுத்துவதே அரசின் இலக்காகும். திட்டத்தின் படி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிலம் வாங்குவதற்கான செலவில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும். இதன் மூலம் பயனாளிகள் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்க முடியும்.

இந்த திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலத்தை 10 ஆண்டுகள் வரை வேறு ஒருவருக்கு விற்பனை செய்யக் கூடாது என்பதும், நிலம் விண்ணப்பதாரரின் பெயரிலேயே பதிவு செய்யப்பட வேண்டும் என்பதும் முக்கிய நிபந்தனைகளாகும். மேலும், இந்த நிலங்களுக்கு முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணங்களில் முழுமையான விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கான தகுதிகளை பார்க்கலாம். வயது: 18 முதல் 55 வரை, குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 இலட்சம், விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டவராக இருக்க வேண்டும். தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்கக் கூடாது. விண்ணப்பதார் நிலமற்றவராக இருக்க வேண்டும், மற்றும் கடந்த 5 ஆண்டுகளில் அவரும் குடும்பமும் நிலத்தை விற்றிரக்கக்கூடாது.

விண்ணப்பிக்க சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை அல்லது வருமானச் சான்று, வங்கி கணக்கு விவரங்கள், தொழில் விவரம் மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங்கள் தேவை. கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட தாட்கோ மேலாளரை தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்கள் திரையில் கொடுக்கப்பட்டுள்ள www.tahdco.com என்ற இணையதளத்தில் பெறப்படுகின்றன.

Related News

Latest News