இன்றைய காலகட்டத்தில் முதலீடு செய்ய பல்வேறு புதிய வழிகள் வந்தாலும், போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்கள் இன்னும் மக்களிடையே அதிக நம்பிக்கையை பெற்றுள்ளன. இதற்குக் காரணம், இத்திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசின் முழு ஆதரவுடன் செயல்படுகின்றன. எனவே, இதில் முதலீடு செய்யப்படும் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்ற உறுதி உள்ளது.
இந்த நிலையில், போஸ்ட் ஆபிஸ் வழங்கும் ஒரு முக்கியமான சேமிப்பு திட்டம் குறித்து இப்போது பார்க்கலாம். இந்த திட்டத்தில், தினமும் ரூ.200 மட்டுமே சேமித்தால், சில ஆண்டுகளில் ரூ.10 லட்சத்துக்கும் மேல் தொகையை பெற முடியும்.
போஸ்ட் ஆபிஸ் RD திட்டம் என்றால் என்ன?
RD என்பது Recurring Deposit எனப்படும் தொடர் வைப்புத் தொகை திட்டமாகும். இது மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதால், இதில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு முழு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படாது. நீங்கள் செலுத்தும் தொகைக்கு நிலையான வட்டி விகிதத்தில் வருமானம் கிடைக்கும்.
இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்
இந்த திட்டத்தில் சேர அதிக தொகை தேவையில்லை. வெறும் ரூ.100 முதலீட்டிலேயே RD கணக்கைத் தொடங்கலாம். இதனால், குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கும் இது ஏற்ற சேமிப்பு திட்டமாக விளங்குகிறது. தற்போது, இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சம் கூட்டு வட்டி முறை. அதாவது, கிடைக்கும் வட்டிக்கும் மீண்டும் வட்டி சேர்க்கப்படுகிறது. இதன் காரணமாக, நீண்ட காலத்தில் சேமிப்பு தொகை வேகமாக வளர்கிறது. இந்த வட்டி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு கணக்கில் சேர்க்கப்படுகிறது.
கடன் வசதி மற்றும் முன்கூட்டியே பணம் எடுக்கும் வாய்ப்பு
இந்த RD கணக்கைத் தொடங்கி ஒரு ஆண்டு கடந்த பிறகு, கணக்கில் உள்ள தொகையின் 50 சதவீதம் வரை கடனாக பெறும் வசதி உள்ளது. அதற்கான வட்டி விகிதமும் குறைவாக இருக்கும்.
இந்த திட்டத்தின் இயல்பான காலம் 5 ஆண்டுகள். ஆனால், 5 ஆண்டுகள் முடிந்த பிறகு விரும்பினால் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். அவசர தேவைக்காக, 3 ஆண்டுகள் கடந்த பின்னர் கணக்கை மூடும் வசதியும் வழங்கப்படுகிறது.
ரூ.10 லட்சம் எப்படி கிடைக்கும்?
நீங்கள் தினமும் ரூ.200 சேமிக்கிறீர்கள் என்று எடுத்துக்கொண்டால், மாதத்திற்கு ரூ.6,000 ஆகும். இந்த தொகையை தொடர்ந்து 5 ஆண்டுகள் செலுத்தினால், மொத்த முதலீடு ரூ.3,60,000 ஆகும். 6.7 சதவீத வட்டி விகிதத்தில், 5 ஆண்டுகளுக்கு பின் உங்களுக்கு கிடைக்கும் வட்டி சுமார் ரூ.68,197. அதாவது, மொத்தமாக ரூ.4,28,197 கிடைக்கும்.
இந்த தொகையை எடுக்காமல், கணக்கை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், 10 ஆண்டுகளில் நீங்கள் செலுத்தும் மொத்த தொகை ரூ.7,20,000 ஆகும். இதற்கு கிடைக்கும் வட்டி சுமார் ரூ.3,05,131. இறுதியாக, உங்களுக்கு கிடைக்கும் மொத்த தொகை ரூ.10,25,131 ஆகும்.
இதனால், ஒரு சிறிய தினசரி சேமிப்பின் மூலம், நீண்ட காலத்தில் ரூ.10 லட்சத்துக்கும் மேல் தொகையை உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
