தமிழ்நாடு அரசு பெண்களின் நலனை முன்னிறுத்தி பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் மிக முக்கியமானதாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கருதப்படுகிறது. இந்த திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற பிரம்மாண்ட நிகழ்வில், இந்த திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இதன் மூலம் புதிதாக 16,94,339 பெண்கள் திட்டத்தில் இணைக்கப்பட்டனர். இதன் அடிப்படையில், தற்போது தமிழகம் முழுவதும் சுமார் 1.30 கோடி பெண்கள் மாதந்தோறும் தங்களின் வங்கிக் கணக்குகளில் உரிமைத் தொகையைப் பெற்று வருகின்றனர்.
அதே நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர், “மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் உயரும்” என்று தெரிவித்திருந்தார். இதன் காரணமாக, இந்த தொகை எப்போது உயர்த்தப்படும், எவ்வளவு உயர்த்தப்படும் என்பதற்கான எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற ஒரு பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ஐ. பெரியசாமி, பொங்கல் பண்டிகை முடிவதற்குள் பெண்களுக்கு ஒரு நற்செய்தி வெளியாகும் என்று கூறினார். பொங்கல் கொண்டாட்டங்கள் நிறைவடைவதற்குள் முதலமைச்சர் பெண்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிடுவார் என்றும் அவர் தெரிவித்தார். இது மகளிர் உரிமைத் தொகையை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு, பெண் வாக்காளர்களை கவரும் வகையில் இந்த அதிரடி அறிவிப்பு இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
