சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி ஆதி என்ற ஆதிகேசவன் . ராஜமங்கலம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கொலை வழக்கு உள்பட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில், பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது நண்பரின் மனைவி சுசித்ராவை பார்க்க ரவுடி ஆதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
அப்போது அவருடன் வில்லிவாக்கத்தை சேர்ந்த சாருமதி என்பவரும் வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் புதிய வார்டு பகுதியில் படுத்திருந்த ரவுடி ஆதியை அடையாளம் தெரியாத 3 பேர் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதனை கண்டு மருத்துவமனையில் இருந்த பொதுமக்கள் அலறயடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த கீழ்ப்பாக்கம் போலீசார், சுசித்ரா, சாருமதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.
