தைவானுக்கு நேரம் நெருங்கிடுச்சா? வெனிசுலா தாக்குதலுக்குப் பிறகு சீனாவின் மாஸ்டர் பிளான்!

வெனிசுலா அதிபர் மதுரோவை அமெரிக்கா தூக்கியது போல, சீனாவும் தைவானை தூக்கப்போகிறதா? உலக அரசியலில் இப்போது இதுதான் ஹாட் டாப்பிக். “அமெரிக்கா செய்தால் சரி, நாங்க செய்தால் தப்பா?” என்று கேட்டு, சீனா தைவானை ஆக்கிரமிக்க வாய்ப்பு இருப்பதாக ஒரு பெரிய விவாதம் கிளம்பியிருக்கிறது. இதுபற்றி அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் (John Bolton) அதிர்ச்சிகரமான சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

ஜான் போல்டன் என்ன சொல்கிறார் தெரியுமா? “சீனா தைவானை மிரட்டுவது ஒன்றும் புதிதல்ல, ஆனால் வெனிசுலா சம்பவத்தைச் சாக்காக வைத்து தைவான் மீது சீனா படையெடுத்தால் அதை ஏற்க முடியாது” என்று கூறியுள்ளார். வெனிசுலாவில் மதுரோ தேர்தலில் மோசடி செய்து ஜெயித்தார், அதனால் அமெரிக்கா தலையிட்டது. ஆனால் தைவான் மக்கள் ஜனநாயக முறைப்படி வாக்களித்து, “எங்களுக்கு சீனா வேண்டாம்” என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். அதனால் தைவான் மீது சீனா கை வைத்தால் அது சர்வதேச அமைதிக்கே பெரிய ஆபத்து என்று எச்சரித்துள்ளார்.

இதே ஜான் போல்டன், இந்தியா – அமெரிக்கா உறவு குறித்தும் ட்ரம்புக்கு ஒரு முக்கிய அட்வைஸ் செய்துள்ளார். “ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது வரி போடுவது, சீனா மீது வரி போடுவது எல்லாம் சரியான முறை அல்ல. பேசித் தீர்ப்பதற்கு முன்பே இந்தியா மீது ட்ரம்ப் நடவடிக்கை எடுத்தது வருத்தமளிக்கிறது” என்று கூறியுள்ளார். சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க வேண்டுமென்றால், அமெரிக்காவும் இந்தியாவும் மீண்டும் நெருங்கிய நண்பர்களாக மாற வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வெனிசுலா விவகாரத்தையும் உக்ரைன் போரையும் ஒப்பிட முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா நடத்தியது அத்துமீறிய தாக்குதல். ஆனால் வெனிசுலாவில் நடந்தது சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான நடவடிக்கை என்று அமெரிக்கத் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆக மொத்தம், ட்ரம்ப் போட்ட பாதை, சீனாவுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக மாறிவிடக்கூடாது என்பதுதான் இப்போது உலக நாடுகளின் கவலை. சீனா தைவானை ஆக்கிரமிக்குமா? இந்தியா – அமெரிக்கா உறவு சீராகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Related News

Latest News