மின்சார வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு

உலகம் முழுவதும் தற்போது மின்சார வாகனங்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் மின்சார வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, மின்சார வாகனங்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முக்கிய முன்னணி மாநிலமாக உள்ளது. இதன் காரணமாக பல தனியார் நிறுவனங்கள் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

அரசு வழங்கும் பதிவு கட்டணக் குறைப்பு, வரி தள்ளுபடி போன்ற சலுகைகளும் மின்சார வாகனங்களை வாங்கவும் பயன்படுத்தவும் மக்களை ஊக்குவிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு தற்போது மேலும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்ட அரசாணையில், மின்சார வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த 100 சதவீத வரி விலக்கு சலுகை இன்றுடன் முடிவடையும் நிலையில், அந்த சலுகை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த வரி விலக்கு 2026 ஜனவரி 1 முதல் 2027 டிசம்பர் 31 வரை அமலில் இருக்கும்.

இந்த 100 சதவீத வரி விலக்கு, மத்திய மோட்டார் வாகன விதிகளின் கீழ் வரையறுக்கப்பட்ட அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கும் பொருந்தும். இதில் போக்குவரத்து வாகனங்கள், போக்குவரத்து அல்லாத தனிநபர் பயன்பாட்டு வாகனங்கள் என அனைத்துவகை மின்சார வாகனங்களும் அடங்கும்.

இந்த அறிவிப்பின் மூலம் மின்சார வாகனங்களை வாங்குவோர் சாலை வரி செலுத்துவதில் இருந்து முழுமையாக விலக்கு பெறுவர்” என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News