வீடு தேடி வரும் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன்… யாருக்கெல்லாம் கிடைக்கும்?

2026 ஆம் ஆண்டு தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை சிறப்பாக நடத்துவது தொடர்பாக, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இந்த சுற்றறிக்கையில், அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு, நியாயவிலைக் கடைகள் மூலம் பரிசுத் தொகுப்பு வழங்க தேவையான அனைத்து முன்தயாரிப்புகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இருப்பினும், ஒவ்வொரு நியாயவிலைக் கடைக்கும் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, 02.01.2026க்குள் டோக்கன்கள் அச்சிட்டு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இந்த டோக்கன்களை கூட்டுறவுத்துறை மூலம் அச்சிட்டு, அனைத்து வகையான நியாயவிலைக் கடைகளுக்கும் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், சுழற்சி முறையில் பரிசுத் தொகுப்பு வழங்க குடும்ப அட்டைகள் தெருவாரியாக பிரித்து பராமரிக்க வேண்டும். அதன்படி, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரரும் எந்த நாள் மற்றும் எந்த நேரத்தில் பரிசுத் தொகுப்பு பெற வேண்டும் என்பதை குறிப்பிடும் வகையில், டோக்கன்களை நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் நேரடியாக குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்கு சென்று வழங்க வேண்டும்.

முதல் நாளில் முற்பகலில் 100 குடும்பங்களுக்கும், பிற்பகலில் 100 குடும்பங்களுக்கும் பரிசுத் தொகுப்பு வழங்கும் வகையில் டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும். இடவசதியைப் பொருத்து, இரண்டாம் நாளிலிருந்து தினந்தோறும் முற்பகல் மற்றும் பிற்பகல் தலா 150 முதல் 200 குடும்பங்கள் வரை பரிசுத் தொகுப்பு பெறும் வகையில் டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும். மேலும், பொங்கல் பண்டிகைக்கு முன்பே முழு விநியோகமும் முடிவடையும் வகையில், டோக்கன்களில் தேதி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

டோக்கன்கள் விநியோகப் பணியை சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடை பணியாளர்களே செய்ய வேண்டும். எந்த காரணத்திற்காகவும், நியாயவிலைக் கடையைச் சாராத நபர்கள் அல்லது அரசியல் சார்ந்த நபர்கள் டோக்கன் விநியோகத்தில் ஈடுபடக் கூடாது என கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டுள்ள நியாயவிலைக் கடைகளின் விவரங்களை தனியாகத் தொகுத்து, அக்கடைகளுக்கு கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். 1500 குடும்ப அட்டைகள் வரை உள்ள கடைகளில் குறைந்தது இரண்டு பணியாளர்களும், 1500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ள கடைகளில் மூன்று பணியாளர்களும் டோக்கன் மற்றும் பரிசுத் தொகுப்பு விநியோகப் பணிகளில் ஈடுபட வேண்டும்.

சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் அல்லது அதிக கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ள நியாயவிலைக் கடைகளின் பட்டியலை முன்கூட்டியே தயாரித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்லது காவல் ஆணையாளருக்கு அனுப்பி, தேவையான காவல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதையும், அதின் தரம் சிறப்பாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். மேலும், டோக்கன் விநியோக முன்னேற்ற விவரங்களை தினமும் மாலை 5 மணிக்குள் Google Sheet மூலம் பதிவாளர் அலுவலகத்திற்கு தவறாமல் அனுப்ப வேண்டும்.

மேற்கண்ட அனைத்து அறிவுறுத்தல்களையும் முறையாக பின்பற்றி, எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல், 2026 ஆம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சிறப்பாகவும் தடையில்லாமலும் செயல்படுத்த வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related News

Latest News