இந்தியாவைச் சேர்ந்த ஒரு அணிக்காக கபடி போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் கபடி வீரருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வீரர் பாகிஸ்தானைச் சேர்ந்த உபைதுல்லா ராஜ்புத் ஆவார்.
கபடி வீரரான உபைதுல்லா ராஜ்புத், சமீபத்தில் பஹ்ரைனில் நடைபெற்ற ஒரு தனியார் விளையாட்டு போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு அணிக்காக விளையாடினார். அந்த போட்டியின் போது அவர் இந்திய அணியின் ஜெர்சியையும் அணிந்திருந்தார்.
இந்த நிலையில், உபைதுல்லா ராஜ்புத்திற்கு பாகிஸ்தான் கபடி சம்மேளனம் (PKF) காலவரையற்ற தடை விதித்துள்ளது. வெளிநாட்டு அணிக்காக விளையாடுவதற்கு பாகிஸ்தான் கபடி சம்மேளனத்திடமிருந்து பெற வேண்டிய அனுமதி சான்றிதழை (NOC) உபைதுல்லா ராஜ்புத் பெறவில்லை. இதன் காரணமாக அவருக்கு காலவரையற்ற தடை விதிக்கப்படுவதாக சம்மேளனம் அறிவித்துள்ளது.
