Saturday, December 20, 2025

சிவகங்கையில் அரசு பேருந்துக்குள் புகுந்து நடத்துனருக்கு அரிவாள் வெட்டு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையிலிருந்து இளையான்குடி நோக்கிச் சென்ற TN 63 N 2055 என்ற எண்ணுடைய அரசு பேருந்து, விஜயன்குடி பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது, மர்ம நபர்கள் பேருந்திற்குள் புகுந்து நடத்துனரை அரிவாளால் சரமாரியாக வெட்டித் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அரசு பேருந்தை பொன் முத்துராமலிங்கம் என்பவர் ஓட்டி வந்ததாகவும், சம்பவ நேரத்தில் சுமார் 55 பயணிகள் பேருந்தில் பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. பேருந்து விஷயன்குடி பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் பேருந்தின் முன்பக்க படிக்கட்டு வழியாக உள்ளே புகுந்துள்ளனர்.

அப்போது, பேருந்தின் பின்பகுதியில் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கிக் கொண்டிருந்த நடத்துனர் மயில் பாண்டியனை நோக்கி சென்று, அவரை ஆயுதத்தால் சரமாரியாக வெட்டித் தாக்கியுள்ளனர். தாக்குதலுக்குப் பிறகு, நடத்துனர் பேருந்திலிருந்து தப்பி ஓடியதாகவும், அவரை மர்ம நபர்கள் விடாமல் துரத்தியதாகவும் கூறப்படுகிறது.

அலறல் சத்தம் கேட்டதும், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் திரண்டனர். இதையடுத்து, மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த மயில் பாண்டியன் (27), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள ஆற்றுப்பாலம் பகுதியைச் சேர்ந்தவர்.

அவரை மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து இளையான்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அரசு பேருந்தில் புகுந்து நடத்திய இந்த வெட்டுத் தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

Latest News