தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது சமீப ஆய்வுகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஆறு ஆண்டுகளில் பிறப்பு எண்ணிக்கை சுமார் 18 சதவீதம் குறைந்துள்ளது.
இந்த சரிவுக்கு குடும்பக் கட்டுப்பாட்டு விழிப்புணர்வு, அரசுத் திட்டங்கள், வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவையே முதன்மை காரணங்களாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
இந்தியாவின் வடமாநிலங்களில் பிறப்பு விகிதம் மெதுவாக உயரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் ஏன் சரிவு ஏற்படுகிறது என கேள்வி எழுந்துள்ளது.
பெற்றோர் குழந்தைகளின் கல்வி, உடல்நலம், எதிர்கால வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். எனவே, அதிக குழந்தைகளுக்கு பதிலாக 1-2 குழந்தைகள் மட்டுமே விரும்புகின்றனர். ‘நாம் இருவர், நமக்கு ஒருவர்’ என்ற கருத்து பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
தமிழகத்தில் குடும்ப நலத் திட்டங்கள், கருத்தடை வசதிகள், மகப்பேறு விழிப்புணர்வு சேவைகள் தீவிரமாக செயல்படுத்தப்படுகின்றன. அரசு மருத்துவமனைகள் மூலம் ஆலோசனைகள் எளிதில் கிடைக்கின்றன.
2019-ம் ஆண்டில் தமிழகத்தில் மொத்தமாக 9 லட்சத்து 45 ஆயிரத்து 842 குழந்தைகள் பிறந்துள்ளன. அதாவது ஒரு நாளுக்கு சராசரியாக 2,591 குழந்தைகள். ஆனால் இந்த ஆண்டில் இதுவரை பதிவான குழந்தைகள் எண்ணிக்கை 7 லட்சத்து 41 ஆயிரத்து 928 ஆக மட்டுமே உள்ளது.
