‘ரஷ்யா தான் பலமான நாடு’…அந்தர் பல்டி அடித்த டிரம்ப், அனல் பறக்கும் சர்வதேச அரசியல்!

ஐரோப்பிய நாடுகள் தற்போது பலவீனமாகவும் ஒருங்கிணைப்பற்றதாகவும் உள்ளன என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு இனி அமெரிக்கா உத்தரவாதம் அளிக்க வேண்டிய நிலை இல்லை என்று டிரம்ப் நிர்வாகம் ஒரு சில நாட்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் அவரது இந்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன.

Politico-வுக்கு அளித்த நீண்ட நேர்காணலில், டிரம்ப் கூறியவை சர்ச்சைக்குள்ளாகி இருக்கின்றன. இந்த கருத்துக்கள், ஐரோப்பாவின் எதிர்காலம் மற்றும் உக்ரைனில் நடந்து வரும் ரஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக டிரம்ப் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கு இடையேயான முரண்பாட்டை மேலும் அதிகரித்துள்ளது.

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அமெரிக்கா முன்மொழிந்துள்ள போர் நிறுத்தத் திட்டத்தின் சில அம்சங்களை ஏற்க மறுத்திருப்பதை குறிப்பிட்ட டிரம்ப், ‘அவர் சமாதானத்துக்கான வாய்ப்புகளை கவனத்தில் கொள்ளத் தொடங்க வேண்டும்’ என்று அறிவுறுத்தினார்.

உக்ரைன் ராணுவம் போரில் பின்னடைவு அடைந்து வருவதாகவும், தற்போதைய சூழ்நிலையில் பேச்சுவார்த்தைகளில் சமரசம் அவசியம் எனவும் டிரம்ப் தெரிவித்தார். மேலும், போரை காரணம் காட்டி உக்ரைன் தேர்தலை தாமதப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்து, அந்நாட்டில் தேர்தல் நடைபெற வேண்டும் என வலியுறுத்தினார்.

அமெரிக்காவின் புதிய திட்ட வரைவை ஜெலென்ஸ்கி இன்னும் படிக்காததாக குறிப்பிட்ட டிரம்ப், ‘அதை அவர் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். ஏராளமான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இது அவருக்குத் தெரிய வேண்டியது மிக முக்கியம்,’ என்றார்.

அமெரிக்கா முன்வைத்துள்ள சில பரிந்துரைகள் ரஷ்யா கேட்ட கோரிக்கைகளுடன் ஒத்துப்போவது ஐரோப்பிய நாடுகளின் கவலையை அதிகரித்துள்ளது. ரஷ்யாவை விட உக்ரைன் மிகச் சிறிய நாடு என்பதால், ரஷ்யாவின் வெற்றி தவிர்க்க முடியாதது என்று டிரம்ப் கூறியுள்ளார்.

‘ரஷ்யாவின் கை ஓங்கி இருக்கிறது. அது எப்போதும் அப்படித்தான். அவர்கள் மிகப் பெரியவர்கள். அவர்கள் மிகவும் பலமானவர்கள்,’ என்று டிரம்ப் கூறினார். உக்ரைனின் வீரத்தை டிரம்ப் பாராட்டிய போதிலும், ஒரு கட்டத்தில் பலமானவர்ள் தான் வெல்வார்கள் என்றும் அவர் கூறியிருப்பது சற்றே அதிர்ச்சிகரமாக இருக்கிறது.

Related News

Latest News