ஹரியானா மாநிலம் பானிபட் அருகே நவுதலா கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில், 6 வயதான வித்தி என்ற சிறுமி திடீரென காணாமல் போயுள்ளார். திருமண வீடு முழுவதும் தேடி பார்த்த போது, அங்கிருந்த தண்ணீர் வாளிக்குள் முகத்தை விட்டபடி சிறுமி வித்தி, மூச்சு பேச்சின்றி கிடந்துள்ளார்.
அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஓடியுள்ளனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்துடன் கல்யாண வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், சிறுமி கடைசியாக உறவுக்கார பெண்ணான பூனம் என்பவருடன் சென்றது தெரியவந்தது இதையடுத்து, அந்த பெண்ணை பிடித்து விசாரித்ததில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது.
34 வயதான பூனத்திற்கு, கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இருப்பினும் அவர் தன்னை ஒரு பேரழகியாக நினைத்துக் கொண்டுள்ளார். எங்கு சென்றாலும் அனைவரின் பார்வையும் தன் மீதே இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்துள்ளார்.
6 வயதான வித்தி என்ற சிறுமி அழகாக இருந்ததால் அனைவரின் பார்வையும் அந்த சிறுமி மீதே இருந்துள்ளது. அதைக் கண்டு ஆத்திரமடைந்த பூனம், சிறுமியை தனியாக அழைத்துச் சென்று தண்ணீர் வாளியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.
இதே மனப்பான்மையில் இருந்தவர் இதற்கு முன்னர் ஏற்கனவே மூன்று பேரை கொலை செய்ததை கேட்டு போலீசாரே, ஆடிப் போயுள்ளனர். இந்த சம்பவம் ஹரியானாவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
