டாலருக்கு ஆப்பு வைத்த பிரிக்ஸ்! தங்கத்தில் உருவாகும் புதிய ‘யூனிட்’ கரன்சி!

உலக வர்த்தகத்தில் பல ஆண்டுகளாகத் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த அமெரிக்க டாலரின் ஆட்டம், இப்போது முடியப்போகிறது. அமெரிக்காவின் இந்த அதிகாரத்திற்கு செக் வைப்பதற்காக, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளைக் கொண்ட ‘பிரிக்ஸ்’ அமைப்பு, ஒரு புதிய ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது. அதுதான், தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட ‘யூனிட்’ என்ற ஒரு புதிய டிஜிட்டல் நாணயம்.

இந்த ‘யூனிட்’ என்பது என்ன? இது ஒரு சாதாரண கிரிப்டோகரன்சி இல்லை. இதன் மதிப்பில் 40 சதவிகிதம், உண்மையான தங்கத்தை அடிப்படையாகக் கொண்டது. மீதமுள்ள 60 சதவிகிதம், இந்த ஐந்து நாடுகளின் பணமும் சமமாகக் கலந்த ஒரு கலவையாக இருக்கும். ரஷ்யாவின் அறிவியல் நிறுவனம் ஒன்று, அக்டோபர் 31-ஆம் தேதியே, ஒரு கிராம் தங்கத்திற்கு ஒரு ‘யூனிட்’ என்ற கணக்கில், 100 யூனிட்டுகளை சோதனை ஓட்டமாக வெளியிட்டு, இந்தத் திட்டத்தின் முதல் படியை எடுத்து வைத்துள்ளது.

சரி, இப்போது ஏன் இந்த அவசரம்? பல ஆண்டுகளாகவே, அமெரிக்கா தனது டாலரை வைத்து, உலக நாடுகளை மறைமுகமாகக் கட்டுப்படுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. உக்ரைன் போர் வந்தபோது, ரஷ்யாவின் சர்வதேச வர்த்தகத்தை முடக்கியது, மற்ற நாடுகளைப் பயமுறுத்திவிட்டது. ‘நாளைக்கு நமக்கும் இதே நிலைமை வரலாம்’ என்று பயந்த உலக நாடுகள், டாலருக்கு ஒரு மாற்று வழியைத் தேடத் தொடங்கின.

ஆனால், இந்தத் திட்டம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இது ஒரு சோதனை ஓட்டம் மட்டுமே. இருந்தாலும், ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல வளரும் நாடுகள், இந்தத் திட்டத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமே, டாலரைத் தவிர்த்து, தங்கத்தை வைத்தே நாடுகளுக்குள் வர்த்தகம் செய்துகொள்வதுதான். இப்படிச் செய்தால், ஒவ்வொரு நாடும் தங்கள் தங்கத்தை, அமெரிக்காவிடம் கொண்டுபோய்க் கொடுக்காமல், தங்கள் நாட்டிலேயே பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும்.

இந்த ‘யூனிட்’ திட்டம் மட்டும் முழுமையாக வெற்றி பெற்றால், அது உலகப் பொருளாதாரத்தின் தலையெழுத்தையே மாற்றி எழுதும். அமெரிக்காவின் ஒற்றை ஆதிக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, ஒரு புதிய உலகப் பொருளாதார ஒழுங்கு உருவாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Related News

Latest News