கடந்த செப்டம்பரில் திருச்சியில் தொடங்கிய விஜயின் பிரச்சார சுற்றுப்பயணம், செப்டம்பர் 27 அன்று கரூரில் நடந்த 3ஆம் கட்ட கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரியில் ரோட்ஷோக்கு அனுமதி கேட்டு இருந்த நிலையில், அனுமதி கிடைக்காததால், உப்பளம் துறைமுக வளாகத்தில் பொதுக்கூட்டம் நடத்தத் தவெக முடிவு செய்துள்ளது.
இந்த கூட்டத்திற்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தவெக கோரிக்கையை கருத்தில் கொண்டு, 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் போன்றோர் வர வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது புதுச்சேரி மக்களுக்காகவே நடத்தப்படும் நிகழ்ச்சி என்பதால், தமிழ்நாட்டின் அண்டை மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர், கழிவறை, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விஜய் பரப்புரைக்கு வரும் வாகனத்தை பின் தொடரக்கூடாது. மரம்,சுற்றுசுவர் மற்றும் வாகனங்களில் ஏறக் கூடாது. விஜய்யின் வாகனத்தை இரு சக்கர வாகனத்திலோ அல்லது வேறு எந்தவித வாகனத்திலும் பின் தொடரக் கூடாது என தவெக தொண்டர்களுக்கு கடும் கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது.
