சென்னை மாநகராட்சி, செல்லப் பிராணிகளுக்கான உரிமம் பெறும் காலக்கெடுவை மேலும் ஒரு வாரம் நீட்டி, டிசம்பர் 14 வரை செல்லுபடியாகும் வகையில் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், உரிமம் பெறுதல் மற்றும் தடுப்பூசி தொடர்பான விதிமுறைகள் மறுபடியும் வலியுறுத்தப்பட்டுள்ளன.
செல்லப் பிராணிகளுக்கு ஆண்டுதோறும் வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்பதும், தடுப்பூசி செலுத்திய தேதியிலிருந்து ஒரு ஆண்டுக்கு மட்டுமே உரிமம் செல்லுபடியாகும் என்பதும் முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை உறுதிப்படுத்துவும், உரிமம் புதுப்பிப்பைத் துல்லியமாக பதிவு செய்யவும் மைக்ரோசிப் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மைக்ரோசிப் எண் மூலம் உரிமையாளரின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்கள் ஆன்லைனில் சேமிக்கப்படுகின்றன.
தற்போது மாநகராட்சி இணையதளத்தில் 91,711 செல்லப் பிராணிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 45,916 பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. முதலில் நவம்பர் 23 வரை காலக்கெடு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் உரிமையாளர்களின் கோரிக்கையினைப் பொறுத்து அது டிசம்பர் 7 வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் தொடர்ச்சியான மழை காரணமாகவும் மேலும் பலர் விண்ணப்பிக்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு, காலக்கெடு டிசம்பர் 14 வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை முழுவதும் திருவிக்கா நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்னம்மாப்பேட்டை, மீனம்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் செயல்படும் செல்லப் பிராணி சிகிச்சை மையங்களில் உரிமம் பெறலாம்.
குறிப்பிட்ட தேதிக்குள் உரிமம் பெற்று, அபராதம் விதிக்கப்படும் சூழ்நிலைகளைத் தவிர்க்குமாறு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
