திருக்கார்த்திகையை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் பாஜக மாநில இளைஞரணி செயலாளர் எஸ் ஜி சூர்யா உள்ளிட்ட 15 பேர் மீது திருப்பரங்குன்றம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை அன்று மலை மீது உள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலில் மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ராம ரவிக்குமார் என்பவர் தொடு வழக்கில், மலையின் உச்சியில் உள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு மகா தீபம் ஏற்றப்பட வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சி பிள்ளையார் கோவிலில் திருக்கார்த்திகை மகா தீபம் நேற்று ஏற்றப்பட்டது. இந்நிலையில்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீபத்தூணில் அறநிலைத்துறை தீபம் ஏற்றாததை கண்டித்து இந்து முன்னணி பாஜக மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் மலை மீதுள்ள தீபத் தூணுக்கு செல்ல பழனியாண்டவர் கோயில் வழியாக முயன்றனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தியதில் ஏற்பட்ட மோதலில் இரு போலீசார் காயமடைந்தனர். இதனையடுத்து இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாஜக மாநில இளைஞர் அணி செயலாளர் எஸ்.ஜி.சூர்யா உள்பட 15 பேர் மீது அனுமதியின்றி கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், பொது சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து செய்தனர். இவர்களில்13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
