தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என்று பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் திமிரை அடக்குவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.
ஈரோட்டில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல… துரோகி என்றும் எடப்பாடி பழனிசாமியை விவசாயி என்று சொல்வது, உண்மையான விவசாயிகளை அவமதிப்பதாகும் எனவும் தெரிவித்தார்.
நெல் கொள்முதல் ஈரப்பதம் விவகாரத்தில் பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைக்காதது ஏன்? என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். எது எதற்கோ கார்கள் மாறிச்சென்று டெல்லியில் தலைவர்களை சந்திக்கும் இ.பி.எஸ், விவசாயிகளுக்காக சந்திக்க செல்லாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி முன்வந்தால் கார் கூட ஏற்பாடு செய்ய தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பாஜகவுக்கு வாக்களிக்காத அனைவரும் தீவிரவாதிகள் என்பது போல் பேசிய ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தார். அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என்று திமிர் எடுத்து ஆளுநரின் திமிரை அடக்கியே ஆக வேண்டும் என்று கூறினார். மசோதாக்களை கிடப்பில் போட்டு குடியரசுத் தலைவர் மீது பழியைப் போட்டு தப்பிக்கும் ஆளுநர், அவதூறுகளை அள்ளி வீசுகிறார் என்று அவர் கூறினார். தமிழ் மொழி பற்றி தமிழ்நாட்டுக்கு நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டு மாணவர்கள் ஆங்கிலம் படித்தால் ஆளுநருக்கு ஏன் எரிகிறது? என்று கேள்வி எழுப்பினார்.
