சென்னை விமான நிலையத்திற்குள், மாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோரை அழைத்து செல்ல அல்லது அவர்களை விமான நிலையத்தில் இறக்கி விட வரும் வாகனங்கள் அனைத்துக்கும்,15 நிமிடங்கள் இலவச நேரம் அனுமதிக்கப்பட்டுள்ளது. 15 நிமிடங்களுக்குள், வெளியில் சென்று விடும் வாகனங்களுக்கு, பார்க்கிங் கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை இன்று முதல் செயல்பாட்டிற்கு, சென்னை விமான நிலையத்தில் வந்துள்ளது. இது பயணிகளுக்கு ஓரளவு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில், இரவு நேரம் தொடங்கி அதிகாலை வரையில், சர்வதேச விமான நிலையத்தில், ஒட்டு மொத்தமாக ஏராளமான விமானங்கள் வருவதும், அதேபோல் இங்கிருந்து புறப்பட்டுச் செல்வதுமாக இருப்பதால், அந்த நேரங்களில், கடுமையான போக்குவரத்து நெரிசல்கள், சென்னை விமான நிலையத்திற்குள் ஏற்படுகிறது.
எனவே அப்போது எந்த வாகனமும்,15 நிமிடங்களுக்குள் வெளியில் செல்வது என்பது நடக்காது. இதனால் அதை போல் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு, கூடுதலாக போக்குவரத்து காவலர்களை, அப்பகுதியில் பணிக்கு அமர்த்தி, வாகன போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதைப்போல் 15 நிமிடங்கள் என்பதை, மாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் நலன் கருதி, 20 நிமிடங்களாக அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கூறுகின்றனர்.
