LPG சிலிண்டர் விலை குறையுமா? அமெரிக்காவிடம் இந்தியா போட்ட முக்கிய டீல்!

இந்தியா, அமெரிக்காவிடம் இருந்து எல்பிஜி எரிவாயுவை இறக்குமதி செய்ய முக்கிய ஒப்பந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. 2026-ஆம் ஆண்டில் 2.2 மில்லியன் டன் அதாவது 22 லட்சம் டன் எல்பிஜி வாங்கும் இந்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகியுள்ளது. இதை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது எக்ஸ் பதிவில் ‘வரலாற்றில் முதன்முறையாக நடைபெறும் முக்கிய முன்னேற்றம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா, உலகின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் எல்பிஜி சந்தைகளில் ஒன்றாக இருக்கும் நிலையில், மக்களுக்கு மலிவான மற்றும் பாதுகாப்பான எரிவாயுவை வழங்க புதிய ஆதாரங்களை தேடி வருகிறது. அதனடிப்படையில் அமெரிக்காவிலிருந்து எல்பிஜி இறக்குமதி செய்வது முக்கியமான நடவடிக்கையாகும்.

இந்திய பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கெமிக்கல்ஸ், இந்துஸ்தான் பெட்ரோலியம் கெமிக்கல்ஸ் ஆகியவை இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. அமெரிக்காவின் கல்ஃப் கடற்கரைப் பகுதியில் இருந்து எல்பிஜி அனுப்பப்படும். இந்தியாவின் ஆண்டிற் தேவையின் சுமார் 10% இதன்மூலம் பூர்த்தியாகும்.

அமெரிக்காவின் முன்னணி உற்பத்தியாளர்களுடன் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்காக உலகளாவிய விலை அதிகரித்திருந்தபோதும், எல்பிஜியை ரூ.500-550 வரம்பில் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. சர்வதேச சந்தை மதிப்பு ரூ.1100-ஐ கடந்திருந்தாலும், விலை உயர்வு மக்களுக்கு சுமையாக அமையாமல் இருக்க அரசு கடந்த ஆண்டு மட்டும் ரூ.40,000 கோடிக்கும் மேல் தொகையை சலுகையாக வழங்கியுள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எரிவாயு வாங்குவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்திருந்த சூழலில், தற்போது அமெரிக்காவிடமிருந்து எல்பிஜி இறக்குமதி செய்வதற்கான இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க மாற்றமாக பார்க்கப்படுகிறது.

Related News

Latest News