பீகார் தேர்தல் தோல்வி எதிரொலி! காங்கிரஸ் போடும் தமிழக அரசியல் கணக்கு! தவெக பக்கம் சாயுமா?

பீகார் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், இரண்டு கட்டங்களாக நடந்த இந்த தேர்தலில், காலை நிலவரப்படி பாஜக–நிதிஷ் குமார் தலைமையிலான NDA கூட்டணி ஆட்சிக்குத் தேவையான 122 இடங்களை கடந்து ஜெட் வேகத்தில் முன்னிலை பெற்றுள்ளது.

தற்போது 190-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் NDA முன்னிலை வகிக்க, தேஜஸ்வி யாதவ் மற்றும் காங்கிரஸ் இணைந்த மகாகட்பந்தன் கூட்டணி சொற்ப இடங்களில் மட்டுமே மேலோங்குகிறது. இதையடுத்து, தேஜஸ்வி யாதவ் பின்னடைவு கண்டால் அதற்கு காரணம் ராகுல் காந்தியே என பலர் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

தேர்தலைத் தொடர்ந்து வெளியான கருத்துக் கணிப்புகளும் NDA மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனத் தொகுத்திருந்த நிலையில், வாக்கு எண்ணிக்கைச் சூழலும் அதையே உறுதிசெய்கிறது. இதன் எதிரொலி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அரசியல் நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். தற்போது தமிழகத்தில் பாஜக–அதிமுக கூட்டணி உறுதியாக இருந்தாலும், NDAவின் பிற கூட்டணி கட்சிகள் ஜனவரியில் தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளன.

இதற்கிடையில், புதிதாக உருவாகிய தமிழக வெற்றி கழகமான விஜய்யின் கட்சியை கூட்டணியில் சேர்க்க பாஜகவும் அதிமுகவும் தீவிரமாக முயல்கின்றன. எடப்பாடி பழனிசாமியும் இதை பொதுவாகவே குறிப்பிட்டுள்ளார். ஆனால் கரூர் சம்பவத்துக்குப் பிறகு த.வெ.க. தலைவர் விஜய் எந்த கூட்டணியிலும் சட்டென இணைவதற்கான முனைப்பைக் காட்டவில்லை. அதே நேரத்தில், காங்கிரஸுடன் விஜய் தரப்பில் பேச்சுவார்த்தை நடக்கிறது என்ற தகவல்கள் வலுவடைந்துள்ளன. திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸின் பட்டும்படாத நிலைமை இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

அடுத்த இரண்டு மாதங்களில் விஜய்யின் கட்சியுடன் பல கட்சிகள் இணைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனினும், மத்திய அளவில் இந்தியா எதிர்க்கட்சிக் கூட்டணியில் திமுக முக்கிய பங்கு வகிப்பதால், காங்கிரஸ் திமுகவை விட்டு பிரிந்து விடுமா என்ற கேள்வி இன்னும் சந்தேகத்துக்குரியதாகவே இருக்கிறது.

Related News

Latest News