டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கள்கிழமை நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தற்கொலைத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பழைய கார் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் முதல் உரிமையாளரிடம் இருந்து இரண்டு பேருக்கு கைமாறி பிறகு நாசவேலைக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் காவல் துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் வாகனத்தின் ஆவணங்களில் முதல் உரிமையாளர் பெயரே பதிவாகியிருப்பதால் அவரை காவல் துறையினர் விசாரணைக்காகப் பிடித்து வைத்துள்ளனர்.
வாகனத்தை விற்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்
உங்களுக்குத் தெரிந்த ஒருவரிடமோ இறுதி உரிமையாளராக இருக்கும் ஒருவரிடமோ காரை விற்பது எப்போதும் நல்லது. வாங்கும் நபரின் முழு விவரங்கள் ஆர்டிஓ படிவங்களில் இருந்தால் மட்டுமே அதில் கையெழுத்திடுங்கள். வெற்றுக் காகிதங்களில் கையெழுத்திடக்கூடாது.
வாகனத்துக்கான காப்பீட்டை ரத்து செய்து (என்சிபியுடன்) புதிய உரிமையாளரிடம் சொந்த காப்பீட்டை வாங்கும்படி கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.
புதிய உரிமையாளரின் ஓட்டுநர் உரிமம் மற்றும் வசிப்பிட சான்றின் நகல்களை வாங்கிக்கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட தேதியில் வாகனம் அவருக்கு வழங்கப்பட்டதை உறுதிப்படுத்தும் ஆவணத்தில் வாங்குபவர் கையொப்பமிடுவதையும் விற்கப்படும் வாகனத்தை குறிப்பிட்ட தேதிக்குள் (அதிகபட்சமாக 30 நாள்களுக்குள்) தனது பெயருக்கு அவர் மாற்றிக்கொள்வார் என்றஉத்தரவாதத்தை எழுத்துபூர்வமாக பெறவும்.
பழைய வாகனத்தை ஸ்கிராப் செய்வதாக இருந்தால் அரசு அங்கீகரித்துள்ள ஸ்கிராப் வியாபாரியிடம் மட்டுமே பழைய வாகனத்தை வழங்க வேண்டும். அப்படி செய்தால் வாகனத்தின் இரும்பு எடைக்கு ஏற்ப அரசு நிர்ணயித்த கட்டணமும் உங்களுக்குக் கிடைக்கும்.
விரிவான தகவல்களுக்கு கீழ்கண்ட வலைதளத்தைப் பார்க்கவும்:
https://vscrap.parivahan.gov.in/vehiclescrap/vahan/welcome.xhtml
