தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை நடை பெறுகின்றன. இந்த நடவடிக்கைகள் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தீவிரமாக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தற்போது மொத்தம் 6 கோடி 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 68,467 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் 2,11,445 வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். மொத்த கணக்கீட்டு படிவங்கள் 100 சதவீதம் அச்சடிக்கப்பட்டுள்ளன. அதில் 5 கோடி 67 ஆயிரத்து 45 படிவங்கள் அதாவது 78.09% விநியோகிக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமிப்பதற்கான விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வழக்கமாக, குறிப்பிட்ட வாக்காளர் பட்டியலின் பாகத்தில் பெயர் கொண்ட வாக்காளர் தான் அந்தப் பகுதியின் வாக்குச்சாவடி நிலை முகவராக நியமிக்கப்படுவார்.
ஆனால், அந்தப் பகுதியில் பொருத்தமான நபர் கிடைக்காத சூழலில், அதே சட்டப்பேரவை தொகுதியில் பெயர் பதிவு செய்த எந்தவொரு வாக்காளரையும் வாக்குச்சாவடி நிலை முகவராக நியமிக்கலாம் என புதிய வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு நியமிக்கப்பட்ட முகவர்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் அல்லது இடம்பெயர்ந்தவர்கள் பற்றிய பதிவுகளை ஆய்வு செய்து திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள். தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் 2,11,445 வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
