தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய போது, ஞானசேகரன் யார், யாரிடம் தொலைபேசியில் பேசினார் என்ற ஆதாரம் என்னிடம் உள்ளது என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, வழக்கறிஞர் எம்.எல். ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, அண்ணாமலையிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரினார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என மகளிர் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், அவர் யார் யாரிடம் பேசினார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகக் கூறிய அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பி அனைத்து ஆதாரங்களையும் பெற்று விசாரிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையின்போது, மனுதாரருக்கும் இந்த சம்பவத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
