பாகிஸ்தான் வரைபடத்தில் பாதி இல்லை! – தாலிபான்களின் ‘Greater Afghanistan’ மேப்!

பாகிஸ்தானுக்கு பெரும் அதிர்ச்சி! தாலிபான்கள், ‘Greater Afghanistan’ என்ற ஒரு புதிய வரைபடத்தை வெளியிட்டு, தெற்காசியாவில் ஒரு பெரும் புயலைக் கிளப்பியுள்ளனர். இந்த வரைபடம் உண்மையானால், பாகிஸ்தானின் பாதி வரைபடம் காணாமல் போய்விடும். இந்த விவகாரம், ஏற்கனவே பதற்றத்தில் இருக்கும் தாலிபான்-பாகிஸ்தான் உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு மதராசா மாணவர்கள், இந்த ‘Greater Afghanistan’ வரைபடத்தை தாலிபான் துணை அமைச்சர் முகமது நபி உமரிக்கு பரிசாக அளித்துள்ளனர். இந்த வரைபடத்தில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா, பலுசிஸ்தான் மற்றும் கில்கிட்-பல்டிஸ்தான் போன்ற மாகாணங்கள், ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதியாகக் காட்டப்பட்டுள்ளன. இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், கில்கிட்-பல்டிஸ்தான் பகுதி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதி.

ஏன் இந்த சர்ச்சை? இதன் ஆணிவேர், “டூராண்ட் லைன்” (Durand Line). 1893-ல், பிரிட்டிஷார், அப்போதைய இந்தியாவையும், ஆப்கானிஸ்தானையும் பிரிக்க இந்த எல்லையைக் கோடு போட்டனர். ஆனால், ஆப்கானியர்கள் இந்த எல்லையை ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. “அது ஒரு கற்பனைக் கோடு” என்று அவர்கள் கூறிவருகின்றனர். பாகிஸ்தானில் உள்ள பஷ்தூன் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் தங்களுக்குச் சொந்தமானது என்பது அவர்களின் வாதம்.

கடந்த மாதம் கூட, இந்த எல்லைப் பிரச்சனையால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இப்போது, துருக்கி மற்றும் கத்தார் தலையிட்டு ஒரு போர் நிறுத்தத்தைக் கொண்டு வந்துள்ளன. ஆனால், அது எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்ற நிலைதான் நீடிக்கிறது.

இது குறித்து தாலிபான்கள் கூறுகையில், “அமெரிக்காவுக்கு எதிரான போரில், பாகிஸ்தான் எங்களையும், எங்கள் மண்ணையும் பயன்படுத்திக் கொண்டது,” என்று குற்றம் சாட்டுகின்றனர். இந்த ‘பெரிய ஆப்கானிஸ்தான்’ வரைபடத்தை வெளியிட்டு, தங்கள் தேசியப் பெருமையை நிலைநாட்டவும், பாகிஸ்தானின் தலையீட்டைத் தடுக்கவும் தாலிபான்கள் முயல்கின்றனர். இந்த வரைபடத்தில் காஷ்மீரின் ஒரு பகுதி சேர்க்கப்பட்டிருப்பது, இந்தியா இந்த விவகாரத்தை எப்படி கையாளப் போகிறது என்ற ஒரு பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.

Related News

Latest News