“உலகை 150 முறை அழிக்கலாம்!” -டிரம்ப் சொன்ன பகீர் தகவல்!

அமெரிக்காவின் மின்சாரக் கட்டமைப்பு, குடிநீர் அமைப்புகள்… எல்லாவற்றுக்குள்ளும் சீனா ஊடுருவி விட்டதாக அமெரிக்க உளவுத்துறை குற்றம் சாட்டி வருகிறது. இந்தச் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “சீனா நமக்கு ஒரு அச்சுறுத்தல் என்றால், நாமும் அவர்களுக்கு ஒரு அச்சுறுதல்தான்,” என்று கூறி ஒரு புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் பேசிய டிரம்ப், “இது ஒரு போட்டி நிறைந்த உலகம். சீனா எப்போதுமே நம்மைக் கவனித்துக்கொண்டிருக்கிறது, நாமும் எப்போதுமே அவர்களைக் கவனித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், ஒருவரையொருவர் வீழ்த்துவதற்குப் பதிலாக, நாம் இணைந்து செயல்பட்டால், இன்னும் பெரியவர்களாக, வலிமையானவர்களாக மாற முடியும் என்று நான் நினைக்கிறேன்,” என்றார்.

சீனாவின் அணு ஆயுத பலம் குறித்தும் டிரம்ப் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டார். “அமெரிக்காவிடம் தான் அதிக அணு ஆயுதங்கள் உள்ளன. ரஷ்யா இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா மூன்றாவது இடத்தில் இருந்தாலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவர்கள் நம்மை சமன் செய்து விடுவார்கள். அவர்கள் மிக வேகமாக அணு ஆயுதங்களை உருவாக்குகிறார்கள்,” என்று கூறினார்.

“இந்த உலகை 150 முறை அழிப்பதற்குப் போதுமான அணு ஆயுதங்கள் நம்மிடம் உள்ளன!” என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்ட டிரம்ப், இது குறித்து புடின் மற்றும் ஜி ஜின்பிங் இருவருடனும் அணு ஆயுதக் குறைப்பு பற்றிப் பேசியதாகவும் கூறினார். “அணு ஆயுத ஒழிப்பு என்பது மிக முக்கியமான விஷயம். நாம் ஏதாவது செய்தே ஆக வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

சமீபத்தில், அமெரிக்கா மீண்டும் அணு ஆயுத சோதனை செய்ய உத்தரவிட்டது ஏன் என்ற கேள்விக்கு, “சீனாவும் ரஷ்யாவும் தங்கள் அணு ஆயுதங்களைச் சோதித்து வருகின்றன. அது உங்களுக்குத் தெரியாது,” என்று கூறி தனது முடிவை நியாயப்படுத்தினார்.

டிரம்பின் இந்தப் பேச்சு, உலகின் மூன்று பெரும் வல்லரசுகளுக்கு இடையே நிலவும் அதிகாரப் போட்டியையும், அதன் பின்னணியில் உள்ள அணு ஆயுத அச்சுறுத்தலையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஒரு பக்கம் அணு ஆயுத ஒழிப்பு பற்றிப் பேசினாலும், மறுபக்கம் புதிய சோதனைகளுக்கு உத்தரவிடுவது, உலக அரங்கில் ஒரு பெரும் பதற்றத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்கியுள்ளது.

Related News

Latest News