ரஷ்யாவின் பொருளாதார கட்டமைப்பை பலவீனப்படுத்தும் நோக்கில், உக்ரைன் தொடர்ந்து ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிசக்தி நிலையங்களைத் தாக்கி வருகிறது. கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மட்டும் உக்ரைன் இராணுவம் 20 ரஷ்ய எரிசக்தி வசதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைனின் பாதுகாப்பு சேவை அமைப்பான SBU-வின் தலைவர் தெரிவித்ததாவது, ‘2025 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 160 ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிசக்தி வசதிகள் வெற்றிகரமாகத் தாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடவடிக்கைகள் தொடரும் என்றும் கூறியுள்ளார். ரஷ்யாவின் போர் நிதி ஆதாரங்களை முடக்குவதே இத்திட்டத்தின் நோக்கம் என அவர் விளக்கியுள்ளார்.
இத்தகைய தாக்குதல்கள் ரஷ்யாவின் பொருளாதாரத்தையும், இராணுவ செயல்திறனையும் சீர்குலைக்கும் அபாயத்தை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
இதேநேரத்தில், உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா தெரிவித்துள்ளார், ரஷ்யா தங்களது நாட்டை க்ரூஸ் ஏவுகணைகளால் தொடர்ந்து தாக்கி வருவதாகவும், அதில் “9M729” என்ற ரகசிய ஏவுகணை பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்த 9M729 ஏவுகணை 2,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளையும் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது. 2019ம் ஆண்டு, இந்த ஏவுகணையின் பயன்பாடு “INF” ஒப்பந்த விதிமுறைகளை மீறுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து, அமெரிக்கா அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகியிருந்தது.
இந்நிலையில், ரஷ்யா இந்த ஏவுகணையை உக்ரைனில் பயன்படுத்தியிருப்பது, அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திர முயற்சிகளுக்கு எதிரான புடினின் வெளிப்படை சவாலாக உக்ரைன் அரசு விமர்சித்துள்ளது.
