வடக்கு டெல்லியின் இப்ராஹிம்பூர் கிராமத்தில் போலி ‘ஈனோ’ தயாரித்து வந்த ஒரு தொழிற்சாலையை டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
சோதனையின் போது, தொழிற்சாலையிலிருந்து சுமார் 91,000 போலி ஈனோ பாக்கெட்டுகள், 80 கிலோ மூலப்பொருள், 54,780 ஸ்டிக்கர்கள், நிறுவன லோகோவுடன் கூடிய 13 கிலோ ரோல்கள், 2,100 எம்டி பாக்கெட்டுகள் மற்றும் ஒரு பேக்கிங் மெஷின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக சந்தீப் ஜெயின் மற்றும் ஜிதேந்திரா என்கிற சோட்டு ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இருவரும் இப்ராஹிம்பூரைச் சேர்ந்தவர்கள் எனவும், இந்த போலி உற்பத்தி மோசடியின் முக்கிய நபர்கள் இவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
போலி ஈனோ பாக்கெட்டுகள் உண்மையானவை என்று கூறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டதாகவும், இது பெரிய அளவில் நடைபெற்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பொது மக்களுக்கு எச்சரிக்கை:
ஈனோ போன்ற பொருட்களை வாங்கும் போது கவனமாக இருக்கும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். உண்மையான ஈனோ பேக்கேஜிங் பிரகாசமாகவும் தெளிவாகவும் இருக்கும். ஆனால் போலி பொருட்களில் மங்கலான அச்சிடல், தவறான லோகோ, அல்லது விலைக்குறிப்பு (MRP) வேறுபாடு போன்றவை காணப்படலாம்.
வாங்கும் முன் உற்பத்தியாளரின் பெயர், பேட்ச் நம்பர், முகவரி மற்றும் விலை ஆகிய விவரங்களை சரிபார்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
