இனிமேல் விமானத்துக்கு ஓடுபாதை எல்லாம் தேவையே இல்லை? புதிய தொழில்நுட்பம்!

சென்னை ஐஐடி விண்வெளி பொறியியல் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், விமானங்கள் ஓடுதளம் இன்றி செங்குத்தாக புறப்படவும், தரையிறங்கவும் உதவும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

பொதுவாக விமானங்கள் புறப்படும் போது ஓடுதளத்தில் நீண்ட தூரம் வேகமாக சென்ற பின்னரே வானில் பறக்கின்றன. அதேபோல், தரையிறங்கும் போதும் ஒரு குறிப்பிட்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. ஆனால், புதிய Vertical Take-off & Landing – VTOL எனப்படும் “செங்குத்து புறப்பாடு மற்றும் தரையிறக்கம்” தொழில்நுட்பம் இந்த சவாலைக் மேற்கொள்கிறது.

இந்த தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி பேராசிரியர் பி.ஏ. ராமகிருஷ்ணா, இணைப் பேராசிரியர் ஜோயல் ஜார்ஜ் மனதரா மற்றும் ஆராய்ச்சியாளர் அனந்து பத்ரன் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

அவர்களின் கூற்றுப்படி, கடந்த பல ஆண்டுகளாக ஹைபிரிட் ராக்கெட் மோட்டார்கள் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளன. அவற்றின் உந்து விசைத் திறனைப் பயன்படுத்தி, விமானத்தை செங்குத்தாக உயர்த்தி, மென்மையாக தரையிறக்க முடியும் என்பது இவர்களின் கண்டுபிடிப்பின் மையக் கருத்தாகும்.

இத்தொழில்நுட்பம் நீண்ட ஓடுதளங்கள் தேவைப்படாததால், மலைப்பகுதிகள், கடின நிலப்பரப்புகள் போன்ற இடங்களில் சிறப்பாக பயன்படலாம். இது வணிகப் போக்குவரத்துக்கு மட்டும் அல்லாமல், பொதுமக்கள் பயண விமானங்கள் மற்றும் ராணுவ பயன்பாடுகளுக்கும் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

இந்த புதிய VTOL தொழில்நுட்பம் குறித்த ஆய்வுக் கட்டுரை, உலகப் புகழ்பெற்ற Journal of Aeronautical and Space Sciences என்ற விண்வெளி ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்களின் இந்த புதுமை, இந்திய விமான தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

Related News

Latest News