இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய தலைமுறை இதய ஸ்டென்ட்! உலகளாவிய அங்கீகாரம் கிடைத்த பெருமை!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற இதய நிபுணர்கள் உலக மாநாடு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில் டெல்லி பத்ரா மருத்துவமனை டீனும், இதய நிபுணருமான டாக்டர் உபேந்திர கவுல் தலைமையில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட “டக்ஸ்டோ-2” எனும் பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டன. இவருடன் பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் பால் துணைத் தலைவராகவும், டாக்டர் பிரியதர்ஷினி திட்ட இயக்குனராகவும் பணியாற்றினர்.

இந்த பரிசோதனையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய தலைமுறை இதய ஸ்டென்ட் ‘சுப்ராப்ளக்ஸ் க்ரஸ்’ மற்றும் சர்வதேச சந்தையில் கிடைக்கும் அமெரிக்க ஸ்டென்ட் ‘ஜீயன்ஸ்’ ஆகியவை ஒப்பிடப்பட்டன.

டாக்டர் கவுல் தெரிவித்ததாவது: ‘இந்தியாவின் 66 இதய சிகிச்சை மையங்களில் இந்த பரிசோதனை நடைபெற்றது. நீரிழிவு நோயுடன், இதயத்திற்கு ரத்தம் வழங்கும் மூன்று முக்கிய நாளங்களிலும் அடைப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு இந்திய தயாரிப்பு ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. இதில் 80 சதவீத நோயாளிகள் மூன்று நாளங்களிலும் அடைப்பு கொண்டவர்கள்.

பரிசோதனையின் முடிவுகள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘சுப்ராப்ளக்ஸ் க்ரஸ்’ ஸ்டென்ட், சர்வதேச தரத்திலான ஸ்டென்ட்களுடன் சமமாக செயல்திறன் கொண்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த உயர்தர ஸ்டென்ட் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் தயாரிக்கப்படுகிறது என டாக்டர் கவுல் தெரிவித்துள்ளார்.

Related News

Latest News