2030-ல் நிலவில் சீன வீரர்கள்! விறுவிறுவென நடக்கும் பணிகள்! அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடி சீனா?

பூமியிலிருந்து சுமார் 425 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சீனாவின் சர்வதேச விண்வெளி நிலையமான “தியான்காங்” (Tiangong) தற்போது முழுமையான செயல்பாட்டில் உள்ளது. இதனை பராமரிக்கும் நோக்கில் புதிய விண்வெளிப் பணி ஒன்றை சீனா ஆரம்பித்துள்ளது.

சீன விண்வெளித் துறை செய்தித் தொடர்பாளர் ஜாங் ஜிங்போ தெரிவித்ததாவது, ‘சீன விண்வெளி வீரர்கள் ஜாங் லு, வூ பெய் மற்றும் ஜாங் ஹாங் ஜாங் ஆகியோர் பூமியிலிருந்து தியான்காங் விண்வெளி நிலையத்துக்குப் புறப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கு தங்கியிருந்து விஞ்ஞான பரிசோதனைகள், உபகரண பராமரிப்பு மற்றும் புதிய தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்’ என்றார்.

சீனாவின் விண்வெளிப் பயண வரலாறு நீண்டது. 2004ம் ஆண்டு நிலவுப் பயணத் திட்டத்தைத் தொடங்கிய சீனா, 2007இல் தனது முதல் ரோபோ Chang-e1 யை நிலவுக்கு அனுப்பியது. அதன் பின்னர், 2020ம் ஆண்டு “Chang-e 5” பணி மூலம் நிலவில் இருந்து 1.7 கிலோ பாறை மற்றும் மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்தது. இது உலகளவில் பெரும் கவனத்தைப் பெற்றது.

இப்போது அந்தப் பயணத்தின் அடுத்த கட்டமாக, வரும் 2030ஆம் ஆண்டுக்குள் சீன விண்வெளி வீரர்கள் நிலவில் கால் பதிப்பார்கள் என்று ஜாங் ஜிங்போ உறுதிப்படுத்தியுள்ளார். இதன் மூலம், நிலவிற்கு மனிதரை அனுப்பும் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு அடுத்ததாக சீனாவும் அந்த வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்யவுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் தனது முன்னணியை உறுதிப்படுத்தும் நோக்கில் சீனா மேற்கொண்டு வரும் இந்த முயற்சி, உலக விண்வெளி போட்டியில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.

Related News

Latest News