இயற்கை மழை குறைவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், செயற்கை மழை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. செயற்கை மழை என்பது, வானிலையிலுள்ள மேகங்களில் குறிப்பிட்ட ரசாயனங்களைச் சேர்த்து மழை பெய்யச் செய்வதைக் குறிக்கும்.
பொதுவாக இதற்காக “சில்வர் அயோடைடு”, “சோடியம் குளோரைடு” அல்லது “பொட்டாசியம் அயோடைடு” போன்ற வேதிப் பொருட்கள் விமானங்கள் அல்லது ட்ரோன்கள் மூலம் மேகங்களில் தெளிக்கப்படுகின்றன. இவை மேகத்தினுள் உள்ள நீர்த்துளிகளை விரிவடைய செய்து மழைத்துளிகளாக கீழே விழச் செய்கின்றன.
இந்த முறையால் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்கலாம், விவசாயத்துக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கலாம் மற்றும் காற்றில் உள்ள தூசித் துகள்களை குறைக்கலாம் என்பன இதன் முக்கிய நன்மைகளாகும். மேலும், காட்டுத் தீ போன்ற சூழல்களில் ஈரப்பதத்தை அதிகரிக்கச் செய்வதற்கும் இது உதவுகிறது.
ஆனால், செயற்கை மழைக்கும் சில பாதகங்கள் உள்ளன. அதிக அளவில் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. நீர்நிலைகள் மாசுபட வாய்ப்பும் உள்ளது. மேலும், இது ஒரு தற்காலிக தீர்வு மட்டுமே; இயற்கை மழையை முழுமையாக மாற்ற முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வல்லுநர்கள் கூறுவதாவது, செயற்கை மழை தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்தாலும், இது இயற்கையின் மழைச் சுழற்சியை நிறுத்திவிடாது. எதிர்காலத்திலும் மழை இயற்கையாகவே பெய்யும். எனினும், வானிலை மாற்றம், உலக வெப்பமயமாதல் போன்ற காரணங்களால் மழை பருவ நிலை மாறக்கூடும் என்பதால், நீர்வள மேலாண்மை மிக அவசியம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
