இனி தொட்டுக் கூட பார்க்க முடியாது! எதிரி நாடுகளை அலறவிட்ட ரஷ்யா!

அணு சக்தியால் இயங்கும் ‘புரேவெஸ்ட்னிக்’ ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. எந்தவொரு வான் பாதுகாப்பு ஏவுகணை முறையாலும் இதை நடுவானில் தடுத்து அழிக்க முடியாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘புரேவெஸ்ட்னிக்’ ஏவுகணை திட்டம் 2018ஆம் ஆண்டு ரஷ்யா அறிமுகப்படுத்தியதாகும். அணு சக்தி கொண்ட இந்த ஏவுகணை, அமெரிக்காவின் வான் பாதுகாப்பு ஏவுகணை திட்டத்துக்கான ரஷ்யாவின் பதிலடி முயற்சியாக உருவாக்கப்பட்டது.

2001ம் ஆண்டு, அமெரிக்கா, சக்திவாய்ந்த ஏவுகணை தயாரிப்பு ஒப்பந்தத்திலிருந்து விலகியதைத் தொடர்ந்து நேட்டோ நாடுகள் தங்கள் பாதுகாப்புத் திட்டங்களை விரிவுபடுத்தியன. இதற்கு எதிராக ரஷ்யா தன்னுடைய சக்தி திறனை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த அணு ஏவுகணையை உருவாக்கியது.

இது பறந்து செல்லும் திசையை முன்கூட்டியே கணிக்க முடியாது என்பதுடன், நீண்ட தூரம் வரை தாக்குதல் நடத்தும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது. அண்மையில், அக்டோபர் 21ம் தேதி நடைபெற்ற பரிசோதனையில், இந்த ஏவுகணை வானில் சுமார் 15 மணி நேரம் பறந்து 14,000 கிலோமீட்டர் தூரத்தை கடந்ததாக ரஷ்ய ராணுவத் தளபதி வலேரி கெராசிமோவ் தெரிவித்துள்ளார்.

சோதனை வெற்றியடைந்ததையடுத்து ரஷ்ய அதிபர் புதின் ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியார். போர்க் கால சீருடையில் பேசிய புதின், ‘இத்தகைய சக்திவாய்ந்த ஏவுகணை உலகில் வேறு எந்த நாட்டிடமும் இல்லை. இதை உருவாக்குவது சாத்தியமில்லை என நிபுணர்கள் நினைத்தனர்; ஆனால் ரஷ்யா அதைச் சாதித்துள்ளது,’ என பெருமிதத்துடன் கூறினார்.

உக்ரைன் போருக்கான அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், இந்த அணு சோதனை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யாவின் வலுவான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

Related News

Latest News