ஓடும் ரயிலில் சிலர் தற்செயலாக மொபைல் ஃபோன், பர்ஸ் அல்லது பிற பொருட்களை கீழே தவறவிடுவது வழக்கம் தான். இத்தகைய சூழலில் பயணிகள் முதலில் பதற்றம் அடையாமல் அமைதியாக செயல்படுவது முக்கியம்.
பொருள் விழுந்த இடத்தை மனதில் குறித்துக் கொண்டு, அருகிலுள்ள ரயில்வே அதிகாரிகள், ரயில்வே போலீஸ் அல்லது ரயில்வே பாதுகாப்பு படை அதாவது RPF ஆகியோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். முக்கியமாக, இச்சூழ்நிலையில் அபாய சங்கிலியை இழுக்கக்கூடாது. அது சட்ட ரீதியாக குற்றமாகும்.
பொருள் விழுந்தது குறித்து தெரிவிக்க, ரயில்வே உதவி எண்கள் 139 அல்லது 182ல் உடனடியாக புகார் அளிக்கலாம். புகார் பதிவு செய்யும் போது, ரயில் எண், பயணி இருக்கை எண் மற்றும் அடையாள ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
புகார் பதிவு செய்யப்பட்டதும், பாதுகாப்பு படையினர் பொருள் விழுந்த இடத்தை அடையாளம் கண்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுவர். மீட்கப்பட்ட பொருட்கள் உரிய பயணிகளிடம் ஒப்படைக்கப்படும்.
அதே நேரத்தில், மொபைல் ஃபோன், நகைகள் போன்றவை திருடப்பட்டால் மட்டும் அபாய சங்கிலியை இழுக்கலாம். ஆனால் தவறி விழுந்த பொருளுக்காக சங்கிலியை இழுப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்காக 1,000 ரூபாய் அபராதம் அல்லது ஓராண்டு வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
பயணிகள் இப்படிப்பட்ட முன் எச்சரிக்கைகளை பின்பற்றினால், தங்கள் பொருட்களை மீட்கவும், சட்ட பிரச்சினைகளைத் தவிர்க்கவும் முடியும்.
