ஜப்பான் புதிய சாதனை! சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆள் இல்லா சரக்கு விண்கலத்தை அனுப்பி அசத்தல்!

சர்வதேச விண்வெளி நிலையமான ISS என்பது பல நாடுகளின் ஒத்துழைப்பில் இயங்கும் விண்வெளி ஆய்வம். இங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் இணைந்து அறிவியல் பரிசோதனைகள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அந்த நிலையத்துக்கு தேவையான பொருட்களை அனுப்பும் முயற்சியாக, ஜப்பான் ஆள் இல்லாத சரக்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியுள்ளது. ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தனீகஷிமா விண்வெளி மையத்திலிருந்து, ஹெச்–3 ராக்கெட் மூலம் HTV–X1 எனப்படும் சரக்கு விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

வெற்றிகரமாக புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட இந்த விண்கலம், அடுத்த கட்டமாக படிப்படியாக சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி பயணிக்கிறது. அங்கு சென்றடைந்த பின், அதில் உள்ள சரக்குகளை robotic arm மூலம் நிலையத்தில் இருக்கும் ஜப்பான் விண்வெளி வீரர் கிமியா யூய் பெற்றுக்கொள்ள உள்ளார்.

மொத்தம் மூன்று மாதங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்து செயல்படவுள்ள இந்த விண்கலம், பின்னர் அங்கிருந்து தேவையற்ற பொருட்களை எடுத்துக் கொண்டு பூமிக்குத் திரும்பும்.

இந்த நடவடிக்கை, ஜப்பானின் விண்வெளி தொழில்நுட்ப திறனை மேலும் உயர்த்தியதாகவும், எதிர்கால மனிதர் சார்ந்த விண்வெளி திட்டங்களுக்கு இது முக்கிய அடித்தளமாக அமையும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Related News

Latest News