தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு நாடு முழுவதும் தங்கம், வெள்ளி நகைகளின் அதிரடி விற்பனை தொடங்கியுள்ளது. இதனையொட்டி பல நகைக்கடைகள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் 0% செய்கூலி போன்ற சலுகைகளை அறிவித்து வருகின்றன. ஆனால், இதன் பின்னால் மறைந்திருக்கும் பல மறைமுகச் செலவுகள் இருப்பதாக நிதி நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
முதலீட்டு வங்கியாளர் சி.ஏ. சர்தக் அனுஜா தெரிவித்திருப்பதாவது, 0% தயாரிப்பு கட்டண சலுகைகள் கவர்ச்சிகரமாக தோன்றினாலும், கடைகள் பல நேரங்களில் கூடுதல் கட்டணங்களை வேறு பெயரில் வசூலிக்கின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் அறியாமலேயே கூடுதல் செலவுகள் ஏற்படுகின்றன.
சில கடைகள் தங்க விலையை சந்தை விலையை விட கிராம் ஒன்றுக்கு ரூ.200 வரை உயர்த்தி நிர்ணயிக்கின்றன. அதேபோல், நகை தயாரிப்பில் வழக்கமாக 2-3% சேதாரக் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், சிக்கலான வடிவமைப்புகள் என்ற பெயரில் 5% வரை உயர்த்தப்படுகின்றன. மேலும், 0% கட்டண நகைகளில் பதிக்கப்பட்ட கற்கள் உண்மையான மதிப்பை விட அதிக விலையில் விற்கப்படுகின்றன.
மேலும், மாரு விற்பனை (buyback) மதிப்பு குறைக்கப்பட்டிருக்கும் சூழலும் காணப்படுகிறது. வழக்கமாக 90% அளவில் வழங்கப்படும் மதிப்பு, சில நேரங்களில் 70–80% ஆகக் குறைகிறது.
சர்தக் அனுஜா, தங்கம் வாங்குவதற்கு முன் BIS Care செயலி மூலம் HUID எண்ணை சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இது தங்கத்தின் தூய்மையையும் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்துகிறது. எனவே, தங்கம் வாங்கும் முன் விலை ஒப்பீடு, விரிவான பில் மற்றும் ஹால்மார்க் சரிபார்ப்பு ஆகியவை அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
