அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபரும், ஜனநாயகக் கட்சியின் முக்கிய தலைவருமான கமலா ஹாரிஸ், ‘அமெரிக்க வரலாற்றில் பெண் அதிபர் ஒருநாள் நிச்சயமாக பதவியேற்பார்’ என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் ஒரு சர்வதேச ஊடக நிறுவனத்திற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை கூறினார். கடந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக களமிறங்கியவர் கமலா ஹாரிஸ். அப்போது அதிபர் ஜோ பைடன் போட்டியிலிருந்து விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது. அவர் தமிழக பாரம்பரியத்தை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் பேட்டியில் மேலும் கூறியதாவது: ‘எனது பேரப்பிள்ளைகள் தங்கள் வாழ்நாளில் பெண் அதிபர் ஒருவர் வெள்ளை மாளிகையில் பதவியேற்பதை காண்பார்கள் என நிச்சயமாக நம்புகிறேன். அது நானாக இருக்கலாம் என்ற நம்பிக்கையும் உள்ளது. அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்த முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. இருப்பினும், அரசியலில் எனது பயணம் தொடரும் என உறுதியாக நம்புகிறேன்,’ என்றார்.
மேலும், கருத்துக் கணிப்புகள் தன்னை பாதிக்காது என்றும், ‘நான் கருத்து கணிப்புகளைப் பொருட்படுத்தியிருந்தால், இன்று நான் அரசியலில் இருக்கவே மாட்டேன். விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகளை சமாளிப்பது அரசியலின் ஒரு பகுதி தான். ஆனால், அதிபர் டிரம்ப்பின் தனிப்பட்ட தாக்குதல்களை பொறுத்துக் கொள்ள முடியவில்லை’ என கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.
அவரது இந்தப் பேச்சு, அமெரிக்க அரசியலில் மீண்டும் அவரின் மீள்பிரவேசம் குறித்து ஊகங்களை கிளப்பியுள்ளது.
