சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு மீண்டும் பதற்றமடைந்துள்ளது. தைவான் கடல்பகுதியில் சீன கடற்படை மேற்கொண்ட திடீர் ராணுவப் பயிற்சிகள், சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன.
சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்ததாவது, ‘தைவானைச் சுற்றிய கடல் மற்றும் வான்பரப்பில் நடந்த இந்தப் பயிற்சிகள், வெளிநாட்டு தலையீட்டிற்கும், தைவானின் பிரிவினை முயற்சிகளுக்கும் எதிரான கடுமையான எச்சரிக்கை’ என கூறியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க கடற்படையின் ‘USS Ronald Reagan’ விமானக் கப்பல், ஜப்பான் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு தைவான் அருகே கடற்பயணத்தில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா இதை ‘பிராந்திய நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வழக்கமான கடற்படை நடவடிக்கை’ என்று விளக்கியுள்ளது.
சீனா, இதனை தைவானுக்கு அமெரிக்காவின் மறைமுக ஆதரவாகக் கருதுகிறது. இதனால் இரு நாடுகளுக்குமிடையில் கடல் பரப்பில் நேரடி மோதல் ஏற்படும் அபாயம் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். தைவான் பாதுகாப்புத் துறை தெரிவித்ததாவது, சீனப் போர்விமானங்கள் மற்றும் கப்பல்கள் தைவானின் பாதுகாப்பு எல்லைக்குள் நுழையவில்லை என்றாலும், அவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன என கூறியுள்ளது.
அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தகப் போர், தொழில்நுட்பத் தடை, தற்போது இந்த ராணுவப் பதற்றம் – அனைத்தும் சேர்ந்து உலக பொருளாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும் புதிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
