பண்டிகை காலங்களில் அல்லது சிறப்பு நிகழ்ச்சிகளில் வீட்டில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் சில நாட்கள் நீடிக்க ஃபிரிட்ஜில் வைக்கப்படுகின்றன. ஆனால், “இனிப்பு வகைகளை ஃபிரிட்ஜில் வைக்கலாமா? எத்தனை நாட்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்?” என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. இதுகுறித்து உணவு நிபுணர்கள் சில முக்கிய விளக்கங்களை கொடுக்கின்றனர்.
பொதுவாக பால், நெய், பால் பொருட்கள் கலந்து தயாரிக்கப்படும் இனிப்புகளான பால்கோவா, மைசூர் பாக், ரஸகுல்லா, குலாப் ஜாமுன் போன்றவை எளிதில் கெடக்கூடியவை. இவற்றை அறை வெப்பநிலையில் 24 மணி நேரத்திற்கும் மேல் வைக்கக்கூடாது. அவற்றை ஃபிரிட்ஜில் வைத்தால் 2 முதல் 3 நாட்கள் வரை புதிதாக வைத்திருக்க முடியும். ஆனால், பால் சாராத இனிப்புகளான லட்டு, ஜிலேபி, சோமாஸ், பர்ஃபி போன்றவை குறைந்த ஈரப்பதம் கொண்டதால் அறை வெப்பநிலையிலும் 4 முதல் 5 நாட்கள் வரை நீடிக்கும்.
நிபுணர்கள் கூறுவதாவது, இனிப்புகளை ஃபிரிட்ஜில் வைக்கும் முன் முழுமையாக குளிரவிட வேண்டும். வெப்பமான நிலையில் வைப்பது ஈரப்பதத்தை உருவாக்கி, பூஞ்சை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மேலும், ஃபிரிட்ஜில் இனிப்பு வகைகளை காற்று புகாத டப்பாவில் மூடி வைக்க வேண்டும். இது மணம் மாறாமல் பாதுகாக்க உதவும்.
முக்கியமாக, சர்க்கரை சிரப் பயன்படுத்தப்படும் இனிப்புகள் ஃபிரிட்ஜில் வைக்கப்படும் போது கடினமாக மாறக்கூடும் என்பதால் அவற்றை ஃபிரிட்ஜில் வைக்காமல், குளிர்ந்த அறை சூழலில் மூடி வைப்பது சிறந்தது.
அதனால், இனிப்பு வகைகளின் தன்மை பொருத்து சரியான பாதுகாப்பு முறைகளை பின்பற்றினால், சுவையும் தரமும் பல நாட்கள் நீடிக்க முடியும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
