அரசியல் கூட்டங்கள்., இந்த கோரிக்கைகளை அரசு பரிசீலிக்க வேண்டும் – பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்

அரசியல் கட்சிகள் தங்களை நம்பி வரும் மக்களின் பாதுகாப்பை முதன்மையாக வைத்து மட்டுமே இனி கூட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு கீழ்காணும் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்க வேண்டுமென பூவுலகின் நண்பர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதிகப்படியான மக்கள் கூடும் நிகழ்வுகளை வெப்பநிலை சார்ந்து ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான சட்ட விதிகள், ஆய்வு முறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

மக்களை அதிக நேரம் குறுகலான சாலைகளில் கூரை/பந்தல் வசதியின்றி நிற்கவைத்து அதன் பின்னர் தலைவர்கள் வந்து சந்திக்கும் வகையில் திட்டமிடப்படும் Road Show தடை செய்யப்பட வேண்டும்.

பொதுவாக அதிக வெப்பம் நிலவக்கூடிய பிப்ரவரி முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் திறந்தவெளி பொதுக்கூட்டங்களைப் பகலில் அனுமதிக்கக் கூடாது.

மாலை 6 மணிக்கு மேலாகவோ அல்லது உள்ளரங்கக் கூட்டங்களுக்கோ அனுமதி வழங்கலாம்.

அப்படியேப் பகலில் அனுமதி வழங்கினாலும் போதுமான நிழற்கூரை/பந்தலுடன் கலந்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் ஒரு மணி நேரத்திற்கு 2லி எனும் அளவில் குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஒன்றிய அரசு கொடும் வெப்பத்தன்மையை பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஓர் பேரிடராக அறிவிக்க வேண்டும்.

கொடும் வெப்பத்தன்மை அளவிடுவதற்கான ஆய்வுகளை இந்திய வானிலை மையம் மற்றும் பிற ஆராய்ச்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.

கொடும் வெப்பம் குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை இந்திய வானிலை மையம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கொடும் வெப்பத்தன்மையைக் கணிப்பதற்காக உருவாக்கப்பட்ட உலகளாவிய வெப்ப நிலைக்குறியீடு (Universal Thermal Climate Index) முறையை இந்திய வானிலை மையம் பயன்படுத்த வேண்டும்.

அதிக மக்கள் கூடும் நிகழ்வுகளில் கொடும் வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் குளிர்விப்பு நிலையங்கள் உள்ளிட்டவற்றை அமைப்பதற்கான வழிமுறைகள் உருவாக்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related News

Latest News