ஏவுகணை சோதனை நடத்தி அச்சத்தை கிளப்பும் வட கொரியா! சமயம் பார்த்து செய்த சம்பவம்!

டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் தென் கொரியா செல்லவுள்ள சூழலில், வட கொரியா ஏவுகணை சோதனை செய்திருப்பது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மட்டுமல்லாமல், தன் இரண்டாவது ஆட்சி காலத்தில் முதல்முறையாக ஆசியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள டிரம்ப், இந்த வார இறுதியில் மலேசியாவில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். அதன் பின்னர் ஜப்பான் வழியாக தென் கொரியாவிலும் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார மாநாட்டிலும் பங்கேற்க உள்ளார். இம்மாநாட்டில் பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில், வட கொரியா கடந்த ஐந்து மாதங்களில் முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்தியதாக தென் கொரியா குற்றம்சாட்டியுள்ளது. பியோங்யாங்கின் தெற்குப் பகுதியில் இருந்து குறுகிய தூரம் பாயும் ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், அவை வடகிழக்கு திசையில் சுமார் 350 கிலோமீட்டர் தூரம் பறந்ததாகவும் தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் இந்த அதிரடி நடவடிக்கையை எதிர்கொள்ள தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தென் கொரிய ராணுவம் அறிவித்துள்ளது.
ஆனால், இந்த ஏவுகணை சோதனை குறித்து வட கொரியா இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.

டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் தென் கொரியா வரவிருக்கும் நிலையில் இந்த நடவடிக்கை, ஆசியா-பசிபிக் பகுதியில் புதிய பதற்றத்தை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News