கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு தினந்தோறும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
இந்தநிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வணிக வளாகங்களும் உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து சேகரிக்கப்படும் குப்பைகள், பேருந்து முனைய வளாகத்தில் கொட்டி வைக்கப்பட்டு அங்கிருந்து லாரிகள் மூலம் குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்வது வழக்கம். ஆனால், அந்த குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் டன் கணக்கில் தேங்கிக் கிடக்கின்றன.
தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக குப்பைகளில் மழைநீர் தேங்கி கொசுக்களால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக இந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
